எரேமியா 18 : 1-10                        16 செப்டெம்பர் 2020, புதன்

“இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறது போல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.” – எரேமியா 18 : 6

மூன்று பெரிய தீர்க்கதரிசிகளில் எரேமியாவும் ஒருவர். இவர் ஆனதோத் ஊரைச் சேர்ந்தவர். இல்க்கியா என்ற ஆசாரியரின் மகன். செம்மையானவர். அன்புள்ளம் கொண்டவர். ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்த 60 ஆண்டுகளுக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர் எரேமியா. எரேமியா என்பதன் பொருள் `கர்த்தரை உயர்த்துங்கள்’ என்பதே. இவர் 40 ஆண்டுகள் தீர்க்க தரிசன பணி செய்தார்.

இஸ்ரவேலர்கள் மீட்பின் திட்டத்திற்காக இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். இவர்களை இறைவன் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்கு கொண்டு வந்து சேர்த்தார். அது அழகான, செழிப்பான தேசம். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்தனர். இறைவனை விட்டு விலகிச் சென்றனர். இதனால் மீண்டும் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். பாபிலோனிய படைகளும், நேபுகாத்நேச்சாரும் இஸ்ரவேலர்களை சூறையாடினர். எருசலேம் அழிவுற்றது. யூதா அரசனும், நாட்டினரும் நாடு கடத்தப்பட்டதை தன் கண்களினாலே கண்டார் எரேமியா. எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. நீ எழுந்து குயவன் வீட்டிற்கு போ, அங்கே என் வார்த்தைகளை உனக்கு தெரிவிப்பேன் என்றார். அப்படியே எரேமியா குயவன் வீட்டுக்குச் சென்றார். இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறது போல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள் என்றார். இதுவே தியான வசனம். நீங்கள் தீமையை விட்டு விலகினால், நானும் உங்களுக்கு செய்ய நினைத்த தீங்கினிமித்தம் மனமாறி அதை செய்யாமல் விடுவேன் என்றார்.

நாம் இறைவன் கையில் களிமண்ணாக இருக்கிறோம். அருள்திரு அறிவர் லுத்தர் விசுவாசப்பிரமாணம் இரண்டாம் பிரிவின் அர்த்தத்தை இப்படி எழுதுகிறார். `கெட்டுப் போய் சபிக்கப்பட்ட நம்மை ஆண்டவர் இயேசு பொன்னினாலும், வெள்ளியினாலும் அல்ல விலைமதிக்க முடியாத தமது பரிசுத்த இரத்தத்தினாலே, குற்றமில்லாமல் பட்ட பாடுகளினாலே, மரணத்திலே, எல்லா பாவங்களிலும் மரணத்திலும், பிசாசின் வல்லமையிலிருந்து மீட்டு இரட்சித்தார். தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.’ கிறிஸ்துவில் நாம் புதுப் படைப்பு. நமக்குப் புதுவாழ்வைத் தந்திருக்கிறார்.

இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்து மனந்திரும்பிய போது அவர்களை மன்னித்தார். பாவிகளாகிய நாம் நமது பொல்லாத சிந்தனை, ஆண்டவருக்குப் பிரியமற்ற வாழ்வு, சுயநலம் இவைகளிலிருந்து மனந்திரும்புவோம். கிறிஸ்துவில் இறைவன் நம்மையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுவார். மனம் திரும்புவோம், திருந்தி வாழ்வோம். மன்னிப்பை பெறுவோம். இயேசுவில் புதுப் பாத்திரமாக வாழுவோம்.

சர்வசிருஷ்டிக்கும் எஜமானரே, நீர் குயவன், நாங்கள் களிமண். கெட்டுப்போன எங்களை புதிய பாத்திரமாக வனைந்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.