1 இராஜாக்கள் 17 : 13-16 05 செப்டெம்பர் 2020, சனி
“கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும்… கலசத்தில் எண்ணெய் இல்லாமற்போவதுமில்லை.” – 1 இராஜாக்கள் 17 : 14
இஸ்ரவேலின் 7-வது அரசர் ஆகாப். இவருடைய நாட்களில் எலியா தீர்க்கராக இருந்தார். இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை விட்டு விலகி பாகால் வழிபாட்டில் இணைந்தார்கள். இறைவன் எலியா தீர்க்கதரிசியை ஆகாப் அரசனிடம் அனுப்பினார். மூன்றரை வருடம் நாட்டில் மழையோ, பனியோ பெய்யாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். தீர்க்கரின் கூற்றுப்படி நாட்டில் மழை பெய்யவில்லை. இதனால் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. இறைவன் எலியாவை சாரிபாத் ஊருக்கு அனுப்பினார். தீர்க்கர் களைப்புடன் அங்கு சென்றார். விறகு சேகரித்த கைம்பெண்ணிடம் குடிக்கத் தண்ணீரும், கொஞ்சம் அப்பமும் கொண்டுவரும்படிக் கேட்டார். விதவை எலியாவிடம் தன்னிடம் ஒரு பிடி மாவும், கொஞ்சம் எண்ணையுமே இருக்கிறது. அதைச் சுட்டு கடைசி முறையாக சாப்பிட்டு மடிந்து போக வேண்டியது தான். அதற்காக விறகு சேகரிக்கின்றேன் என்றாள். எலியா தீர்க்கதரிசி அவளிடம், அம்மா முதலில் எனக்கு ஒரு சிறிய அடையைச் செய்து கொண்டு வா என்றார். இறைவன் தேசத்தில் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் மாவு செலவழிந்து போகாது. கலசத்தில் எண்ணெய் குறைந்து போகாது என்று இஸ்ரவேலின் இறைவன் சொல்லுகிறார் என்றார். இதுவே நமது தியானவசனம். அந்தப் பெண் தீர்க்கதரிசியின் வார்த்தையை நம்பினாள். கீழ்ப்படிந்தார். அவர் சொன்னபடி செய்தாள். கர்த்தர் தந்த வாக்கின்படியே அப்பெண்மணி வீட்டுப் பாத்திரங்கள் வறண்டு போகவில்லை. அவள் குடும்பம் பாதுகாக்கப்பட்டது. இச்சூழலில் அவளுடைய ஒரே மகன் இறந்து போனான். இதை அறிந்த எலியா இறைவனிடம் விண்ணப்பம் பண்ணினார். இறைவன் எலியாவின் விண்ணப்பத்தைக் கேட்டார். பிள்ளை உயிர் பிழைக்கச் செய்தார். விதவைப் பெண் எலியா தீர்க்கதரிசியிடத்தில், ‘நீர் இறைவனின் மனிதன். உமது வாயின் வார்த்தை இறைவனுடையது. உண்மையானது’ என்றாள்.
திக்கற்றவர்களை இறைவன் பாதுகாக்கிறார். அவர்களுக்கு அற்புதமாக உணவளிக்கிறார். ஆண்டவர் இயேசு நம்மீது மனதுருகுகிறவர். நமது உணர்வுகளை, தேவைகளை அறிகிறார். எனவே கவலைப்படவேண்டாம். ஆண்டவரை நம்புவோம். இறைவனின் வார்த்தையை நம்புவோம், கீழ்ப்படிவோம். மேன்மையடைவோம். நம்முடையவைகளை பிறருடன் பகிர்ந்து கொள்வோம். இறையாசி பெற்று இறைமக்களாக வாழுவோம்.
விண்ணப்பத்தை கேட்பவரே, எங்களுக்கு எப்பொழுது என்ன தேவை என்பதை அறிகிறீர். உமக்கு நன்றி. எங்கள் தேவைகளை நிறைவேற்றும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
