நியாயாதிபதிகள் 11 : 36-40                                 17 ஆகஸ்ட், 2020 திங்கள்

“அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்.” – நியாயாதிபதிகள் 11 : 29

யெப்தா என்னும் நியாயாதிபதி இஸ்ரவேல் மக்களை ஆறுவருடம் நியாயம் விசாரித்தார். இவரது தியாகமும் கடவுளைப் பற்றிய வைராக்கியமும் என்றும் நினைக்கப்படவேண்டிய ஒன்றாகும். யெப்தாவின் சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து யெப்தாவை வீட்டை விட்டு துரத்தி யுத்தத்திற்கு வந்தனர். படைக்கு தலைமை ஏற்க யாரும் இல்லாதபடியால் அவரை துரத்திய குமாரர்கள் யெப்தாவிடம் வந்து படைக்கு தலைமை ஏற்க அழைத்தனர். தன்னை துரத்தியவர்கள் என்றும் பாராமல் யெப்தா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அம்மோனியரோடு உள்ள யுத்தத்தில் வெற்றிபெற்றால் முதலாவது எதிர்கொண்டு வருவது எதுவோ அதை பலியிடுவேன் என்று கடவுளிடம் பொருத்தனை செய்திருந்தார். யுத்தத்தில் வெற்றி பெற்றார். தன் மகள் முதன் முதலாக எதிர் கொண்டு வரக் கண்டார். கடவுளிடம் தாம் செய்தப் பொருத்தனையின்படி பலி பலி செலுத்தி தனது நேர்மையை வெளிப்படுத்தினார் யெப்தா.

நம் வாழ்வில் பலரை தள்ளி வைக்கிறோம். ஆனால் கடவுள் அவர்களை ஏற்றுக் கொண்டு உயர்த்துகிறார் என்பதை யெப்தாவின் வரலாறு தெரிவிக்கிறது. சிலர் மரணபயத்தினாலும் சிலர் சுய விருப்பங்கள் நிறைவேறவும் பொருத்தனை செய்கிறார்கள். பலர் பொருத்தனைகளை தள்ளிப்போடுகிறார்கள். சிலர் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தாமதப்படுத்துகிறார்கள். நன்மைகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் மனிதர்களா நாம்? கடவுள் தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே நமக்குக் கொடுத்தவர். அவர் நமக்கு உதவுகிறார். நமது வேண்டுகோள்களுக்கு செவி சாய்க்கிறார். உண்மையாய் உறுதிமொழிகளை நிறைவேற்றி வாழ்வோம். கடவுள் நம்மை காப்பாராக.

ஜெபங்களுக்கு பதில் தரும் கடவுளே! உமக்குரிய பொருத்தனைகளை காலம் தாழ்த்தாமல் உமக்கு செலுத்தி வாழ உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.