2 இராஜாக்கள் 14 : 23-29 16 ஆகஸ்ட், 2020 ஞாயிறு
“இவன் கர்த்தரின் பார்வையில் … இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப் பண்ணினவன்.” – 2 இராஜாக்கள் 14 : 24
இன்றைய தியான பகுதியில் கடவுளின் பார்வையில் தீமையானதைச் செய்த யெரோபெயாம் பற்றி அறிய முடிகிறது. இவன் யோவாசின் மகன். இஸ்ரவேலின் 13-ஆம் அரசன். யெரோபெயாம் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தான். இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்கள் அனைத்தையும் இவனும் செய்தான். யெரொபெயாம் செய்த பாவங்களைப் போல யெரோபெயாம் தன்னுடைய மக்களை எருசலேம் ஆலயத்துக்குப் போகாமலிருக்கும்படி பொன் கன்றுக் குட்டிகளை செய்து மக்களை வழிபடச் செய்தான்.
இவனுடைய நாட்களில் ஆமோஸ் தீர்க்கதரிசி இவன் மேலும் இஸ்ரவேல் மேலும் வரப்போகிற கடவுளின் தண்டனையை பற்றி கூறினான். இதோ, என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவே தூக்கு நூலை விடுகிறேன். இனி அவர்களுக்கு மன்னிக்கமாட்டேன். யெரொபெயாம் பட்டயத்தால் சாவான். இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைப்பட்டே போகும் என்று ஆமோஸ் தீர்க்க தரிசனம் கூறினார். யெரொபெயாம் மரித்தபின் அவனுடைய குமாரன் சகரியா அரசனானான். இரண்டாம் யெரொபெயாம் நல்லாட்சி செய்தாலும் கடவுளின் மக்களை கடவுளுக்கு ஏற்ற வழியில் நடத்தாமல், விக்கிரக ஆராதனை செய்யும்படி செய்தான்.
பிரியமானவர்களே கடவுள் நாம் அவர் விருப்பப்படி வாழ விரும்புகின்றார். நல்லவைகளை நமக்கு தெரியப்படுத்துகின்றார். அவர் வழி நடக்க விரும்புகின்றார். தீமைகளை விட்டு, நன்மை செய்து வாழ அழைக்கின்றர். நாம் பாவ செயல்களை அதிகமாக செய்கின்றோம், அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கின்றோம். கடவுளின் தண்டனைக்குத் தப்ப கடவுள் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசு நம் பாவங்களை தம் மீது ஏற்று கல்வாரி சிலுவையில் மரித்தார். இயேசுவில் பாவமன்னிப்பு நமக்குண்டு. அவரில் வைக்கிற விசுவாசத்தில் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு அவர் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழுவோம்.
அன்பின் கடவுளே! பொல்லாப்பை விட்டு தூய்மையை விரும்பி, உமக்கு ஏற்ற பாதையில் நடந்து இயேசுவில் உம்முடைய பிள்ளையாக வாழ பெலன் தாரும். உம்மை மட்டும் ஆராதிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
