2 இராஜாக்கள் 12 : 1-21 15 ஆகஸ்ட், 2020 சனி
“அவனவன் … மனதிலே ஏவப்பட்டுக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வரும்…. எல்லா பணத்தையும்…” – 2 இராஜாக்கள் 12 : 4
உன்னிடம் இருக்கும்போது கொடுத்துவிடு. உன்னிடத்தில் இல்லாதிருக்கும்போது கடவுள் உனக்குக் கொடுப்பார். நமது மனம் விரும்பும் படி காணிக்கை படைப்பது நமது கடமை. பணிக்காக, பணியாளருக்காக, தேவை என்று வரும் ஏழைகளுக்காக, ஆலய கட்டிடத்திற்காக கொடுக்க வேண்டும்.
இன்றைய தியானப் பகுதியில் ஆலயத்தை பழுது பார்த்த யோவாஸ் பற்றி வாசிக்கிறோம். யோவாஸ் அகசியாவின் மகன், யூதாவின் ஒன்பதாம் அரசன். இவன் சிறு வயதில் அவனுடைய அத்தை யோசேபாவால் ஆறு ஆண்டுகள் கோவிலுக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டான். அதன் பின் பிரதான ஆசாரியனாகிய யோய்தா கலகம் எழுப்பி அத்தாலியாவைக் கொன்று யோவாசை அரசனாக்கினான். யோவாஸ் அரசாட்சியை ஏற்றபின் தேவாலயத்தைப் பழுதுபார்த்து அநேக சீர்த்திருத்தங்களைச் செய்தான். இவற்றைச் செய்வதற்கு யோய்தா உதவினார். யோய்தா இறந்த பின் ஜனங்கள் பின் வாங்கத் தொடங்கினார்கள்.
அதன்பின் கீரியாவின் அரசனாகிய ஆசகேல் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான். யோவாஸ் ஆலயத்திலும், அரண்மனையிலுமிருந்த பொன் வெள்ளி யாவையும் அவனுக்குக் கொடுத்ததினால் அவன் திரும்பிப் போனான். ஜனங்கள் விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபடத்துவங்கினார்கள். யோய்தாவின் குமாரன் சகரியா ஆவியினால் ஏவப்பட்டு அவர்களின் மேல் கடவுளின் தண்டனை வருமென்று கூறினான். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளை மீறுகிறது என்ன? கடவுளை நீங்கள் விட்டுவிட்டதினால் கடவுள் உங்களை விட்டு விடுவார் என்று கூறினான். இதனால் அரசனின் கட்டளைப்படி, கல்லெறிந்து கொல்லப்பட்டான். யோவாஸ் யோய்தாவிடம் போதனை பெற்றிருந்தபடியால் தன் ஆயுள் காலமெல்லாம் கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்து வந்தான். ஆனாலும் அவனால் மக்களின் சிலைவழிபாட்டை நிறுத்த முடியவில்லை. ஆலயத்தின் மேலுள்ள மரியாதையால், ஆலயத்திற்கு செல்வம் முழுவதும் கொடுத்தாவது அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினான். அதுமட்டுமல்ல மக்கள் அவனவன் மனதில் ஏவப்பட்டு, ஆலயத்திற்கு கொண்டுவரப்படும் பணம், ஆலயப் பழுது பார்க்கும் பணிக்கு என்று செலவு செய்யப்படவேண்டும் என்றான். இந்தப் பணியைச் செய்யாத ஆசாரியர்களை கண்டித்தான். இனி ஆலய பழுது பார்க்கும் பணிக்கு என்று மக்களிடம் தனியாகப் பணம் பெறக் கூடாது என கட்டளை கொடுத்தான்.
நாம் வழிபடும் இறைவனின் ஆலயத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்வது நமது கடமை. ஆலயம் கடவுள் வாழும் இடம். நாம் வாழும் வீடுகளை எப்படிப்பராமரிக்கிறோம்? அந்த முக்கியத்துவத்தை ஆலயத்திற்கும் தரவேண்டும். கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டதிலிருந்து கடவுளுக்குக் கொடுப்போம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
அன்பின் கடவுளே! உமது வீடாகிய ஆலயத்தை நேசிக்கவும், அதில் வாசமாயிருப்பதையும் விரும்பி செயல்படுத்த மனம் தாரும். காணிக்கைகளினால் பணி சிறக்க துணை நிற்க பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
