2 இராஜாக்கள் 10 : 6-32                                      14 ஆகஸ்ட், 2020 வெள்ளி

“நேர்மையானதை நீ நன்றாய் நடப்பித்து என் மன விருப்பத்தின்படி யெல்லாம் செய்தபடியினால்…” – 2 இராஜாக்கள் 10 : 30

இந்தக் குழந்தை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த மனிதர் அனைவருக்கும் பிரியமானவர் என்று சொல்ல கேட்டிருக்கின்றோம். அனைவருக்கும் உகந்தவர்களாக நாம் இல்லாவிட்டாலும் சிலருக்காவது நாம் பிடித்தவர்களாக இருக்க முடியும்.

தனது ஆட்சியின் துவக்கத்தில் யேகூ கடவுளுக்கு உகந்தவனாக நடந்தான். இவன் இஸ்ரவேலின் பத்தாம் அரசன். இஸ்ரவேல் அரசனாகிய யோராமுக்குக் கீழ் சேனாதிபதியாயிருந்தான். யேகூ கிலியாத்திலுள்ள ராமோத்தில் இருக்கும்போது எலீஷா தீர்க்க தரிசியின் சொற்படி தீர்க்க தரிசன சங்கத்தில் உள்ள ஒருவனால் அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்டவன். இது அவன் யோராமுக்கு விரோதமாக எழும்ப ஏதுவாயிற்று. யோராம் அரசன் சீரியர் தன்னை வெட்டின காயங்களை ஆற்றி கொள்ள போயிருந்த இடத்தில் யேகூ அவனைக் கொன்றான். யேகூ பேசபேலைக் கண்டு அவனையும் கொன்றான். ஆகாபின் குடும்பத்தாரில் ஒருவரையும் மீதியாக வைக்காதபடி யேகூ கொன்று போட்டான்.

யேகூ 28 வருடம் அரசாண்டான். இவனுடைய குமாரர் இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருந்தார்கள். காரணம், யேகூவிடம் கர்த்தர், என் பார்வையில் நேர்மையானதை நீ நன்றாய் நடப்பித்து என் மன விருப்பத்தின்படியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேல் சிங்காசனத்தில் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார். இந்த வாக்கைப் பெற்ற யேகூ பிறகு கடவுளாகிய கர்த்தரிடமிருடந்து விலகினான். இஸ்ரவேலர் பாவம் செய்ய வழி செய்தான். தன் மக்கள் எருசலேம் ஆலயத்துக்குப் போகாமலிருக்கும்படி இரண்டு பொன் கன்றுக் குட்டிகளை செய்து பெத்தேலிலும், தாணிலும் நிறுத்தி, ஆசாரியரை ஏற்படுத்தி பண்டிகை கொண்டாடும்படி செய்தான். கடவுளை மறந்து அவர் பிரமாணங்களையும் நியமங்களையும் மறந்து மக்களை பாவத்தில் வழி நடத்தினான்.

கடவுள் நம்மை நேர்மையுள்ளவர்களாய் நடக்க வேண்டும் என்ற கட்டளைகளை கொடுக்கின்றார். கடவுளின் மக்களாக வாக்குப்பெற்றிருக்கிற நாம் அவரை விட்டு விலகிப்போதல் முறையல்ல. அவைகளை கடைபிடித்து கடவுளுக்கு ஏற்ற பாதையில் நேர்மையாய் நடப்போம். எந்த நிலையிலும் கடவுளை மறவாதிருப்போம்.

அன்பின் கடவுளே, பொறுப்புகள் வரும் போது பாவம் செய்யாதபடி என்னை பாதுகாத்தருளும். உமது கட்டளைகளை கைக்கொண்டு நேர்மையாக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்