2 இராஜாக்கள் 9 : 21-26 13 ஆகஸ்ட், 2020 வியாழன்
“யேகூவே, சமாதானமா என்று கேட்க, …பில்லிசூனியங்களும் இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் எது?” – 2 இராஜாக்கள் 9 : 22
உலகில் எல்லா மனிதர்களும் சமாதானமாய் வாழ விரும்புகிறார்கள் தனிபட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் சமாதானம் வேண்டும் என்று ஆசிக்கிறார்கள். பிரச்சனை இல்லாத நிலையில் தான் சமாதானம் ஏற்படும்.
இன்றைய தியானப் பகுதியில் சமாதானம் இல்லாத நிலையை யோராம் வாழ்வில் அறிந்துக் கொள்ள முடிகிறது. யோராம் என்றால் `கர்த்தர் உயர்த்தப்பட்டார்’ என்று பொருள். ஆகாப், யேசபேல் என்பவர்களின் மகன் இவர். இவருடைய தமையன் அகசிய அரசன் பிள்ளை இல்லாமல் மரித்தபடியால் இவர் இஸ்ரவேலின் அரசனானார். ஒரு சமயம் யோராம் யேகூவைக் கண்டவுடனே யேகூவே, சமாதானமா என்று கேட்க, யேகூ உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும் இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் எது என்றான். அப்போது யோராம் தன் இரதத்தைத் திரும்பிக் கொண்டு ஓடிப்போய், அகசியாவைப் பார்த்து, அகசியாவே இது சதிமோசம் என்றான். யேகூ தன் கையில் வில்லை எடுத்து அம்பு யோராமின் நெஞ்சை ஊடுருவிப்பாய அவன் புயங்களின் நடுவே எய்தான். அவன் தன் இரதத்தில் சுருண்டு விழுந்தான்.
யோராம் இஸ்ரவேலின் மேல் பன்னிரெண்டு ஆண்டுகள் அரசாண்டான். யோராம் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஆனாலும் தன் தகப்பனைப் போலும் தன் தாயைப் போலுமல்ல. தன் தகப்பன் செய்திருந்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான். ஆயினும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டுவிடாமல் கொண்டிருந்தான். இவன் தன் சொந்த மக்களை பலி செலுத்த எருசலேம் தேவலாயத்துக்குப் போகாமலிருக்கும்படி அன்னிய தெய்வ, பலிபீடங்களை கட்டி, பொன், கன்றுக்குட்டிகளை வார்த்து, ஆசாரியரை ஏற்படுத்தி, பண்டிகைகளை கொண்டாட செய்து கடவுளின் கோபத்துக்கு ஆளானான்.
நாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்க முயன்றாலும் சிறு தவறு கூட நம்முடைய வாழ்வையே அழித்துவிடும். அன்றாட வாழ்வில் நாம் தடுமாறுவதற்கும் பாவத்தில் தவறி வீழ்வதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே ஆண்டவரை எப்போதும் பற்றிப்பிடித்திருப்போம். அவரே நம்மை வழி நடத்துபவர் ஆகட்டும்.
சமாதானத்தின் கடவுளே! இயேசுவில் பாவ மன்னிப்பைப் பெற்று சமாதானத்தோடு வாழவும், சமாதானத்திற்கான காரியங்களை செய்யவும் பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
