2 இராஜாக்கள் 16 : 1-14                               27 ஜூலை, 2020 திங்கள்

“கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாகத் துரத்தின … படியே தன் குமாரனை முதலாய் அக்கினியிலிட்டான்.” – 2 இராஜாக்கள் 16 : 3

மிருகங்களை பலியிட தடைசெய்யப்பட்ட காலத்திலும்கூட நரபலிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தொழில் சிறக்க, செல்வம் பெருக, குடும்பம் செழிக்க நரபலி கொடுக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இன்றைக்கு தன் மகனை அக்கினியிலிட்ட அரசன் ஆகாஸ் பற்றி காண்போம். இவன் யூதாவின் அரசனாசிய யோதாமின் மகன். ஆகாஸ் பாகால்களுக்கு விக்கிரகங்களைச் செய்து பலியிட்டு, தன் குமாரரை அக்கினியில் போட்டான். தன்னுடைய மேல் வீட்டில் வான சேனைகளுக்குப் பலிபீடங்களைக் கட்டினான். ஆகாஸ் இஸ்ரவேலுக்கும், அசீரியாவுக்கும் விரோதமாக, ஏசாயாவின் ஆலோசனையைக் கேளாமல், ஆகீரியா அரசனின் உதவியைத் தேடி செல்வங்களையும், வெள்ளியையும், பொன்னையும் காணிக்கையாக அனுப்பினான். இதினால் யூதா அசீரியாவுக்குக் கீழ்ப்பட்டது. ஆகாஸ் திகியாத்பிலேகனைச் சந்தித்து தமஸ்குவுக்கு சென்று திறை கொடுக்கப் போனபோது அங்கு பலிபீடங்களைக்கண்டான். அதைப்போலவே எருசலேமிலே பலிபீடங்களைச் செய்யும்படி ஆசாரியனாகிய உரியாவிடம் கட்டளையிட்டான். புதிய பலிபீடத்தில் ஆகாஸ் பலி செலுத்தினான். இந்த காரியங்களினால் கடவுள் ஆகாசை சீரிய அரசனின் கையில் ஒப்புக் கொடுத்தார். ஆனாலும் ஒதேத் என்னும் ஒரு தீர்க்கதரிசி முன் வந்து அவர்களைத் திரும்ப அனுப்பும்படி செய்தான். சீரியரும், எப்பிராயீமியரும் யூதாவுக்கு விரோதமாய்ச் சேர்ந்துக் கொண்டார்களென்று ஆகாஸ் கேள்விப்பட்ட போது, அவன் இதயம் கலங்கினது. கடவுளின் சொற்படி ஏசாயா அவனிடம் போய் அவனைத் தைரியப்படுத்தி கடவுளிடத்தில் ஓர் அடையாளத்தைக் கேட்கும்படி சொன்னான். அவன் கேட்கமாட்டேன் என்றபோது ஏசாயா தீர்க்கர் இம்மானுவேலைப்பற்றிய பேர் பெற்ற தீர்க்க தரிசனைத்தை உரைத்தான்.

நம்முடைய பாவங்களுக்காக தன்னையே சிலுவையில் பலியாக்கியவர் இயேசு. நாம் எந்தவித பலியையும் நமது மீட்பிற்காக செய்ய வேண்டியது இல்லை. நம்மை மீட்ட ஆண்டவரை நேசிப்பதும் நன்றியோடு அவரில் சார்ந்து வாழ்ந்திருப்பதுமே நமது கடமை. இதை மறந்துவிடாதிருப்போம். இயேசுவில் விசுவாசம் வைப்போம். அழியாத நிலை வாழ்வைப் பெறுவோம்.

இம்மானுவேலராக குமாரனைத் தந்த அன்பின் கடவுளே! இயேசுவில் உம்மைக் கண்டு உண்மைக் கடவுளாகிய உம்மை மட்டும் வணங்கி, வழிபட்டு வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.