நியாயாதிபதிகள் 16 : 25-31 24 ஜூலை, 2020 வெள்ளி
“கர்த்தராகிய ஆண்டவரே!… இந்த ஒரு விசை மட்டும் என்னை நினைத்தருளும். என்னைப் பலப்படுத்தும்.” – நியாயாதிபதிகள் 16 : 28
இஸ்ரவேலர்களை பெலிஸ்தியர் நாற்பது ஆண்டு காலம் ஆண்டு வந்தனர். இக்காலகட்டத்தில் மனோவா என்பவருக்கு கடவுள் சிம்சோன் என்னும் குழந்தையைக் கொடுத்தார். குழந்தை பிறப்பிலிருந்தே கடவுளுக்குரியவன் என்ற கோட்பாட்டில் சவரக்கத்தி அவன் தலை மீது படாமல் நாசீராக வளர்க்கப்பட்டார். ஆண்டவரின் ஆவி சிம்சோனுடன் இருந்தது.
சிம்சோன் கடவுளின் ஆற்றலை அதிகமாக பெற்ற வீரனாக திகழ்ந்தான். தன்னை தாக்க வந்த சிங்கத்தின் வாயை பிளந்தான். யூதர்கள் தன்னை பிடித்து கட்டிய போது கட்டப்பட்ட கயிறுகள் நெருப்பில் சணலைப் போல் விழுந்தது. மேலும் ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பை கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றான்.
சிம்சோன் தெலிலா என்ற பெண்ணை விரும்பி நேசித்தான். பெலிஸ்திய சிற்றரசர்கள் சிம்சோனின் ஆற்றல் எதில் இருக்கிறது என்பதை கண்டறியும் பொறுப்பை தெலிலாவிடம் கொடுத்திருந்தனர். சவரக்கத்தி உடலில் தலையில் படக்கூடாது என்ற ரகசியத்தை தெலிலா அறிந்தாள். ஒருநாள் தெலிலா மடியிம் சிம்சோன் படுத்திருக்கும் போது, ஒரு ஆளை வைத்து சிம்சோன் தலையின் மயிர் கற்றைகளை மழித்துப்போட்டாள். அவன் கண்களும் பிடுங்கப்பட்டன. ஒரு நாள் சிம்சோன் ஒரு தெய்வீக விழாவில் வேடிக்கை காட்டுவதற்காக அழைக்கப்பட்டான். நாம் வேடிக்கை பார்க்கும்படி சிம்சோனைக் கூட்டி வாருங்கள் என்று சொல்லி கூட்டிவந்தார்கள். சிம்சோன் அவர்களுக்கு வேடிக்கையானான். கடவுளின் ஆற்றல் அவனைவிட்டு அகன்றுபோனதை உணராத சிம்சோன் இரு மிகப்பெரிய தூண்களின் நடுவில் நிறுத்தப்பட்டான். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் கூடி இருந்தனர். அப்போது சிம்சோன் கடவுளைத் தேடி வேண்டுதல் செய்தான். இந்த ஒரு முறை மட்டும் ஆற்றல் தாரும் என்று கடவுளிடம் வேண்டினார். கடவுள் வல்லமையைக் கொடுக்கவே, சிம்சோன் அந்த வீட்டை தாங்கி நின்ற இரு தூண்களையும் சாய்த்தான். வீட்டில் இருந்த அனைவரும் மாண்டனர்.
நமக்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? நமது பலம் கடவுளிடமிருந்து வருகிறது என்பதை அறிந்து நம்பி வாழ்வோம். நமது பலத்தை தவறாக உபயோகிக்காதிருப்போம். தூய ஆவியானவர் இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டு நம்மை ஆற்றல்படுத்தி வருகிறார். சிம்சோனைப் போல வல்லமையை கடவுளிடம் பெற்று வாழ்வோம்.
ஆற்றல் மிக்க கடவுளே! பலமிழந்து, பலகீனர்களாக வாழும் எங்களுக்கு உமது ஆவியின் பலத்தை தாரும். ஆற்றலைத் தாரும்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.
