1 பேதுரு 5 : 5-7             22 ஜூலை, 2020 புதன்

“நீர் என்னோடு கூட வந்தால் போவேன்.” – நியாயாதிபதிகள் 4 : 8

கர்வம் எந்த நிலையிலும் நமக்குத் தேவையற்றது. இதில் சிலர் இல்லாதவற்றை இருப்பதுபோல் காட்டும் வறட்டு கர்வத்தைக் கொண்டிருப்பார்கள். இக்கர்வம் ஆபத்தானது. துன்பத்தையும் இகழ்ச்சியையும் கொண்டுவரும். சில நன்மைகள் வரவிடாமல் தடுக்கும்.

இத்தகைய வறட்டு கர்வத்திற்கு ஆளாகாமல் நன்மைகளைப் பெற்ற ஒருவரைக் குறித்து இத்தியானத்தில் படிக்கப் போகிறோம். அவர் ஒரு நாட்டின் தலைவர் அவர் பெயர் பாராக். தலைவன் என்று சொன்னாலே கர்வம் வந்துவிடும். இல்லாததை கூட இருப்பது போல காட்டிக் கொள்வர். பாராக் இஸ்ரவேலில் ஒரு தலைவராக இருந்தார். அப்போது அந்த நாடு கானானில் அரசன் யாபீனிடம் அடிமைப்பட்டிருந்தது. யாபீனை எதிர்க்க பலமில்லாமல் பாராக் இருந்தார். அவரை சந்தித்த தெபோராள் என்னும் தீர்க்கத்தரிசி நீ யாபீனோடு போர் செய் என்றாள். பாராக் தான் தலைவனாயிற்றே என்று யோசிக்கவில்லை. என்னோடு நீர் வாரும் என்றார். ஒரு பெண்ணை தனக்கு துணையாக அழைத்து செல்ல அவர் யோசிக்கவில்லை. தலைவன் என்ற அகம்பாவம் இன்றி தன்னை தாழ்த்தி பிறர் துணையுடன் போரில் அவர் வெற்றி பெற்றார்.

நாம் கடவுளுக்கு முன் ஒன்றும் இல்லாதவர்கள், பலமற்றவர்கள். எல்லாம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு எதையும் கடவுளிடம் கேட்காமலிருந்தால் நாம் அறிவிலிகளே! வாய் விட்டுக் கேட்போம். உண்மையாய் கேட்போம். வெற்றியுள்ள வாழ்வை அவர் தருவார். கடவுளை நம் துணைக்கு அழைப்போம். வாழ்வில் எல்லா நிலையிலும் துறையிலும் வெற்றி கொள்ளுவோம்.

நல்ல கடவுளே! உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் நல்லதை செய்பவர் நீர். வறட்டு கர்வத்தால் உம்மிடம் எதையும் கேட்காமல் இருக்க எங்களை விட்டு விடாதிரும். தாழ்மையோடு உமது துணையை வாஞ்சிக்கும் எங்களுக்கு வெற்றியுள்ள வாழ்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.