2 நாளாகமம் 14 : 1-15                   20 ஜூலை, 2020 திங்கள்

“கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும் …உமது பேரில் நம்பிக்கை வைத்து…திரள் கூட்டத்தை எதிர்க்க வந்தோம்.” – 2 நாளாகமம் 14 : 11b

மகா அலெக்சாண்டர் உலகத்தையே தன் ஆட்சிக்குள் கொண்டு வர முயற்சித்தார். காரணம் அவரின் போர் பலம் அதிகம். அமெரிக்கா இன்று எல்லா நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பதற்கு காரணம் போர் ஆயுதங்களும் படை பலமுமே காரணம். நெப்போலியன் வெற்றி பெறவும், நாடுகளை கைப்பற்றவும் நாடுகளை அடிப்பணிய வைக்கவும் அவருடைய படை பலம் முக்கியமாயிருந்தது.

சேனைகளின் அரசன் ஆசா பற்றி இப்பகுதியில் காண்போம். இராஜ்யம் பிரிக்கப்பட்டபின் இவர் யூதாவின் மூன்றாம் அரசனானார். அப்சலோமின் மகளான மாகாள் இவருடைய தாய். தேசம் இவருடைய நாட்களில் பத்து வருஷமளவும் அமைதலாயிருந்தது. ஆசா தன் கடவுளாகிய கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்தார். அந்நிய தெய்வ வணக்கத்தை முடிவிற்குக் கொண்டுவந்தார். தங்கள் பிதாக்களின் கடவுளாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப் பிரமாணத்தின்படி வாழவும் கட்டளையிட்டார். ஆசாவினிடம் பெரிய சேனை இருந்தது. எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்ச வீரரோடும், முந்நூறு ரதங்களோடும் அரேஷாமட்டும் வந்தார். ஆசா அவiரை எதிர்க்கச் சென்று அவர்களை கடவுளாகிய கர்த்தரின் பேரில் நம்பிக்கைக் கொண்டு முறியடித்தார். ஒரு சமயத்தில் ஆசா கர்த்தரைத் தேடாமல், சீரியருடைய உதவியை நாடினதினால் ஞானதிருஷ்டிக் காரனாகிய கனானி அவரை கண்டித்தார். ஆகவே ஆசா கோபம் கொண்டு கனானியாவை சிறையில் அடைத்தார். பிறகு நோயுற்ற காலத்திலும் கடவுளை மறந்தார் ஆசா.

பிரியமானவர்களே, பல வேளைகளில் நாமும் இப்படித் தான் கடவுளை மறந்து வைத்தியர்களை நாடுகின்றோம். முதலில் இறைவனிடம் வருவோம். நம் காரியங்களை அவருக்கு தெரியப்படுத்துவோம். கடவுள் சுகம் கொடுப்பார். காரியங்களை வாய்க்கப் பண்ணுவார். கடவுளின் கிருபையால் வெற்றி மேல் வெற்றி பெறுவோம். கடவுளில் முழுவதுமாகச் சார்ந்திருங்கள்.

எங்களை நேசிக்கின்ற கடவுளே, உம்மை முழுமையாக, நம்பி எங்களை அர்ப்பணிக்கிறோம். உம் சித்தம் அறிந்து செயல்பட அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.