1 இராஜாக்கள் 14 : 1-10 19 ஜூலை, 2020 ஞாயிறு
“யெரொபெயாம் தன் வீட்டாருக்கும் பாவத்திற்கேதுவானான்.” – 1 இராஜாக்கள் 13 : 34
நாள், நட்சத்திரம் பார்க்கும் வழக்கம் இன்றும் நம்மிடம் உள்ளது. திருமணம் நன்றாக நடக்குமா? குடும்பத்தின் தொழில் எப்படி போகும்? குடும்பத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்றெல்லாம் ஜோதிடம், கிளிஜோசியம்; மந்திரவாதிகளிடம் செல்வது, குறிகேட்பது எல்லாம் இன்னும் மக்களிடம் இருக்கும் பழக்க வழக்கங்கள்.
இன்றைய தியானத்தில் நோயுற்ற தன் மகனின் எதிர்காலம் எப்படி என்று அறியத் துடிக்கின்ற அபியாவின் தந்தை பற்றியும் அவள் மகன் பற்றி பார்ப்போம். அபியாவின் தந்தை முதலாம் யெரொபெயாம் தான் செய்த பாவத்தினால் கடவுளின் தண்டனையை பெற்றவன். கடவுள் யெரொபெயாமிடம், சாதாரண ஜனங்களின் நடுவில் இருந்த உன்னை நான் உயர்த்தி, இஸ்ரவேல் என்னும் என் மக்கள் மேல் அதிபதியாக்கினேன். தாவீதின் அரசை எடுத்து உன் கையில் கொடுத்தேன். நீ என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் விக்கிரகங்களுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து என்னை முதுகுக்கும் பின்னே அகற்றி விட்டாய். ஆகவே உன் வீட்டின் மேல் தீங்கு வரச்செய்வேன். ஒரு ஆண் பிள்ளையும் இராதபடி நிர்மூலமாக்குவேன் என்று கூறினார். அதன்படி ஒரே மகன் அபியாவை நோயினால் தண்டித்தார். மகன் அபியா நோயுற்ற போது தனது வருங்காலத்தை அறிந்து விடும்படி தனது மனைவியை இறைவாக்கினர் அகியாவிடம் அனுப்பினார். அவள் மாறுவேடம் பூண்டிருந்தார் என்றாலும், அகியா அவளை அடையாளம் கண்டு கொண்டார். ஏனெனில் அவளது வருகையைப் பற்றி கடவுள் ஏற்கெனவே அகியாவிற்கு அறிவித்திருந்தார்.
அகியா அவளிடம் யெரொபெயாம் வீட்டிற்கு வரவிருக்கும் அழிவை அறிவித்தார். ஆனால் அபியாவின் மேல் ஆண்டவர் கருணைக்கண் கொண்டதினால் அவருக்காக இஸ்ரவேலர் எல்லோரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வர் என்று முன்னறிவித்தார். அகியா தீர்கன் சொன்னபடி ஆண் பிள்ளை இல்லாமல் அவன் குடும்பம் தண்டிக்கப்பட்டது.
கால நேரங்கள் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்டவை. நமக்குத் தேவையான எதையும் அதனதன் காலத்தில் செய்து தருகிறவர் ஆண்டவர். அதைச் சந்தேகப்படவோ, வேவு பார்க்கவோ கூடாது. கடவுள் கிருபையாக நம்மை மகிமையும் மேன்மையும் அடையச் செய்கிறார். நாம் உயர்நிலையடையும் போது கடவுளை மறவாமலிருப்போம். கடவுள் தருகின்ற வாய்ப்புகளை அவர் நாமம் மகிமைப்பட பயன்படுத்துவோம். கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழுவோம்.
கடவுளே, நீர் கொடுக்கின்ற கட்டளைகள் எங்கள் வாழ்க்கைக்கும், எதிர்கால நலனுக்கும் என்பதை அறிந்து அதன்படி நடக்க பெலன் தாரும். எங்கள் வாழ்க்கை முழுவதும் உம் கையில் என்பதை உணர்ந்து வாழும் மனதைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
