2 சாமுவேல் 21 : 8-14 16 ஜூலை, 2020 வியாழன்
“அவர்களைக் கர்த்தருடைய சமூகத்தில் மலையின்மேல் தூக்கிப் போட்டார்கள்.” – 2 சாமுவேல் 21 : 9
துன்பம், சோகம், கவலை இல்லாத மனிதர்களே இல்லை. ஏதாவது ஒரு சோக சம்பவம் குடும்பத்தில் நடந்து, அது நம் உள்ளத்திலே ஆழமாக பதிந்திருந்தால், அதை எளிதாக மறக்கமுடியாது. சில வேளைகளில் அந்த சம்பவங்களை நினைத்து, நினைத்து, கவலைப்படுவோம். கண்ணீர் வரும். குடும்ப இழப்புகளை ஈடு செய்ய முடியாது என்பது உண்மையே.
தியான பகுதியில் ரிஸ்பாள் என்பவள் தன் குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வை நினைத்து கலங்கி நின்ற சம்பவத்தைப் பார்ப்போம். ரிஸ்பாள் என்ற பெயருக்கு சூடான நிலக்கரி என்று பொருள். இவள் ஆயாவின் மகள். சவுலின் மனைவிகளில் ஒருத்தியும் ஆவாள். சவுல் இறந்த பின் அபிநேர் இவரைத் தன் மனைவியாக்கி கொண்டார்.இது ஆட்சிக்கு உரிமை கோருவதற்குச் சமமாகும்.
பெயரளவில் அரசனாக இருந்த சவுலின் மகன் இசிபகால் அபிநேருக்கு சவால் விட்டார். எனவே அபிநேர் இஸ்ரவேலின் தலைவரான தாவீதுடன் தொடர்பு கொண்டார். சவுல் கிதியோனியரைக் கொன்றதால் தான் பஞ்சம் வந்தது என்று நினைத்த தாவீது சவுலின் ஏழு புதல்வர்களையும் ரிஸ்பாளின் இரு புதல்வர்களையும் மேராப்பின் ஐந்து புதல்வர்களையும் தூக்கிலிட கிபியோனியர் கையில் ஒப்படைத்தார். இவர்கள் வாற்கோதுமை அறுப்பு துவங்குகிற முதல் நாட்களிலே கொல்லப்பட்டார்கள். அப்போது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுத் துணியை எடுத்துக் கொண்டு போய், அதைப் பாறையின் மேல் விரித்தாள். அறுப்பு நாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து பிரேதங்கள் மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும், இரவில் காட்டு மிருகங்களாகிலும் அவர்கள் மேல் விழவொட்டாதிருந்தாள். இக்காரியம் தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. தாவீது தூக்கிலிடப்பட்டவர்களின் சடலங்களை எடுத்து முறையாக அடக்கம் பண்ண கட்டளையிட்டார். அதன்படி அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். அதன்பின் நாட்டிற்கு நல்லது நடக்க கடவுள் உதவி செய்தார்.
தாவீதின் காலத்தில் நாட்டில் மூன்று வருடம் பஞ்சம் உண்டானது. காரணம் கிபியோனியரைக் கொன்ற சவுலின் நிமித்தமே என்பதைக் கர்த்தரின் சமூகத்தில் தாவீது தெரிந்து கொண்டார். கிபியோனியர் இஸ்ரவேல் இனத்தை சார்ந்தவர்கள் அல்ல. எமோரியரில் மீதியாக இருந்தவர்கள். தாவீது இவர்களை கொண்டு சவுலின் குடும்பத்தை அழித்தார். இது நாட்டின் மக்களுக்காக தாவீது செய்த காரியம். மரித்தவர்களை முறையாக அடக்கம் செய்தார் என்பது தாவீதின் மனித நேயம் வெளிகாட்டுவதை காண முடிகிறது.
எல்லா துயரங்களுக்கும், சோகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இறைவனிடம் தீர்வு உண்டு. சவால்களைச் சந்திக்கத் தயங்காதீர்கள். உங்கள் சோகத்தைக் கடவுள் அறிவார். விடுதலையை அவரிடமே கேளுங்கள். உங்கள் தவறுகளை அவரிடம் அறிக்கையிடுங்கள். விடுவிக்க வல்லவர் காத்திருக்கிறார். துன்பம் போக்கும் கடவுளிடம் அடைக்கலம் தேடுவோம். இயேசுவில் அவர் தரும் ஆறுதலைப் பெறுவோம். சமாதானமாய் வாழ்வோம்.
கடவுளே, சோகங்களை, மறந்து மகிழ்ச்சியோடு வாழும் வழி உம்மிடம் உண்டு என்பதை உணர்ந்து வாழ உம்மிடம் வருகிறோம். மனித நேயத்தோடும் கரிசனையோடும் வாழும் மனதைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
