ரோமர் 7 : 16 – 19                  ஜூன் 18, 2020 – வியாழன்

“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” ரோமர் 7 : 24

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சில ரோமப் பேரரசர்கள், கொலைக் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கி வந்தார்கள். கொலை செய்யப்பட்டவரின் உடலை கொலையாளியின் முதுகோடு சேர்த்துக் கட்டிவிடுவார்கள். மரணதண்டனையின் விதிப்படி குற்றவாளியின் முதுகிலிருந்து கொலை செய்யப்பட்டவனின் உடலை அகற்ற எவருக்கும் அனுமதி இல்லை. இந்தக் கொடிய பழக்கம் நமக்குத் தியானவரிகளை நினைவு படுத்துகிறது. மரித்துப் போன ஒன்று தன்னோடு பிணைக்கப்பட்டிருப்பது போலவும், தான் சென்றவிடமெல்லாம் அது தன்னோடு கூட வருவது போலவும் பவுல் குறிப்பிடுகிறார்.

இயேசு கிறி°துவின் பாடு, மரணம் உயிர்ப்பு வழியாக நாம் பாவமன்னிப்புப் பெற்றவர்கள். பாவத்தில் செத்திருந்த நம்மை கிறி°து விடுவித்துள்ளார். நாம் நமது பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளோம். நமக்குப் பதிலாக பாவமற்ற இயேசு தண்டனையை ஏற்றார்.

கடவுளின் பிள்ளைகளான நமக்கும் வாழ்வில் பல போராட்டங்கள் உண்டு. அவற்றை ஜெயித்து பரிசுத்தத்திற்கு கடவுள் நம்மை அழைக்கின்றார். ஆனால் நாமோ பரிசுத்த வாழ்வு வாழ முடியாமல் தவிக்கிறோம். அதாவது பாவகரமான இயல்பை – மரித்த உடலை – நமது உடலோடு இணைக்கப்பட்டிருப்பது போல உணர்கிறோம். அதன் பாரத்தால் நாம் தடுமாறுகிறோம். சிலர், நான் போய் இப்படி செய்தேனே; அதை நினைத்து பார்த்தால் என் உடம்பு கூசுகிறது என்று தங்கள் தவறை உணரும் போது கூறுவர்.

கிறி°துவில் நாம் புதிய சிருஷ்டிகளாக்கப்பட்டாலும் நம்மிடம் பாவத்தின் வடு உள்ளது. பாவத்தின் வடுவினால் ஏற்படும் வேதனைகளை வெற்றி கொள்ள கிறி°து தமது ஆவியானவரை நமக்குத் தந்துள்ளார். நமது வேதனைகளை பாவத்தின் பாரத்தை அவரிடம் இறக்கிவைப்போம். விடுதலை பெறுவோம்.

தேற்றரவாளனாக, சகாயராக, ஆவியானவர் பாவத்தின் சக்தியிலிருந்து நம்மை விடுவிக்கிறார். ஆவியானவருக்குள் சுதந்திர வாழ்வு வாழ்ந்திட இறைத் துணை நமக்குண்டு.

பிதாவே! உமது ஆவியானவரைக்கொண்டு பாவ சக்திகளிலிருந்து பாதுகாத்து வருகிறதற்காக உமக்கு நன்றி படைக்கிறேன். ஆமேன்.