ரோமர் 1 : 28 – 32                                   ஜூன் 5, 2020 – வெள்ளி

“எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமை அடையாதிருக்கிறார்கள்.” ரோமர் 3 : 23

முழு மனுக்குலமும் தனது பாவத்தின் காரணமாக கடவுள் முன் நிற்க வேண்டியவர்கள் என்கிறது தியானவரி. இந்த உலகமும் நாமும் கடவுளின் படைப்பு. மனிதப்படைப்பின் முன்னோடி முதல் மனிதனான ஆதாம். மனிதனைக் கடவுள் தம்முடைய சாயலில் படைத்தார். தம்மோடு அன்போடும் ஐக்கியத்தோடும் வாழ அனுமதித்தார். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு கடவுளோடு சஞ்சரிப்பது. கடவுளோடு சஞ்சரிப்பது அல்லது வாழ்வது என்பது இறைமகிமை.

ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட மனிதனோ தன்னைப் படைத்தவரையே ஒதுக்கினான். கீழ்ப்படியாமற் போனான். பாவம் என்ற கீழ்ப்படியாமை, இலக்கு தவறிய நிலை, மனித இனத்தையே பீடித்தது. பாவத்திலிருந்து மனித குலம் மீள முடியவில்லை. கடவுளை விட்டு விலகி விட்டது மனித இனம். மனிதர்கள் தேவ மகிமைக்குத் தகுதி யற்றவர்களானார்கள். பாவ சாபத்திற்கு மனுக்குலத்தில் ஒருவரும் விலக்கல்ல. பாவசாபத்தில் இருந்து மீள என்ன வழி என்று மனிதன் முயற்சிக்கிறான். பலவற்றை வழிகளாக நம்பிக் கண்டுபிடிக்கிறான். இறுதியில் தோல்வியடைகிறான். புனிதர் அகுஸ்தீன் என்பவர் மனிதனின் நிலையை ‘மனிதன் முற்றிலும் இயலாமையில் இருக்கிறான்’ என்கிறார். (கூடிவயட னநயீசயஎவைல டிக அயn) படைக்கப்பட்ட மனித குலத்தை மீட்க கடவுள் திட்டமிட்டார். செயலாற்றினார். கடவுளின் குமாரன் இயேசு உலகின் மீட்பரானார். இயேசு கிறிஸ்துவில் இறைவனின் உலக மீட்புத் திட்டம் ஒருவர் கூட கெட்டுப் போகாமல் புதிய வாழ்வு பெற்று கொள்ள வேண்டும் என்பதே. ஒருவரும் பழைய பாவ வாழ்வில் நிலைத்து பரம வாழ்வை, புதிய வாழ்வை இழந்து போகக் கூடாது என்பதே கடவுளின் திட்டம்.

எல்லாரும் பாவிகள் என்ற நிலைமாறி, நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை இயேசுவில் கடவுள் தருகிறார். நாம் புதிய படைப்புகள் ஆக்கப்பட்டிருக்கிறோம். மீண்டும் நாம் கடவுளுக்குரியவர்கள். சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே பூலோகத்திலும் பரலோகத்திலுமுள்ள யாவையும் அவர் மூலமாய்த் தம்மோடு சமாதானப்படுத்தி ஒப்புரவாக்கிக் கொள்ளவும் பிதாவானவர் பிரியங் கொண்டார் என்கிறது திருவசனம். (கொலோசேயர் 1 : 20) மகிழ்வுடன் வாழ்ந்திருப்போம். இயேசுவில் நமக்குப் பாவ மன்னிப்பு! தேவ சமாதானம்! தேவ மகிமை நமக்கு உறுதிசெய்யப் பட்டுள்ளது.

கடவுளே! கெட்டுப் போன என்னை உமது குமாரனில் மீட்டு உமக்குச் சொந்தமாக்கிக் கொண்டதற்கு நன்றி படைக்கிறேன். ஆமேன்.