மாற்கு 15 : 1-15 27 மார்ச், 2020-வெள்ளி
“பிரதான ஆசாரியர் அவர்மேல் அநேக குற்றங்களைச் சாட்டினார்கள்.” – மாற்கு 15 : 3
நீதித்துறையில் ஓர் சட்டமுண்டு. குற்றஞ் செய்கிறவன் தண்டிக்கப்படாமல் போகலாம். ஆனால் குற்றம் செய்யாதவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதே அது. நிரபராதிகள் தண்டனை அனுபவிப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குற்றங்களை ஜோடித்து ஒருவனை குற்றவாளி எனத் தீர்ப்பவர்களைப் பற்றி உங்கள் நிலை என்ன?
அன்னாவும், காய்பாவும் ஆசாரியர்களுக்குப் பிரதானமாக ஆண்டு வந்தனர். இயேசு கைது செய்யப்பட்ட உடனே விசாரணைக்காக பிரதான ஆசாரியனிடம் கொண்டு போகப்பட்டார். பிரதான ஆசாரியனுக்கு தீர்ப்பு எழுதும் உரிமை இல்லாதபடியால் இயேசுவின் மீது அனேக குற்றங்களை சாட்டினார்கள். இயேசு தேவ நிந்தனை செய்தார் என்பதும் எருசலம் தேவாலயத்தை இழிவுபடுத்தினார் என்பதும் மதரீதியாக வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் ஆகும். என்றாலும் இவை ஆதாரப்பூர்வமாக, விளக்கங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.
இக்காலத்தில் மனந்திரும்பவேண்டிய இன்னொரு கூட்டம் குற்றம் சாட்டுபவர்களும் விசாரிக்கிறவர்களுமே. இவர்கள் நீதி, நியாயம் இறைவார்த்தைகள் எல்லாம் அடிப்படையாக வைத்து விசாரிக்கிறார்களா? தீர்ப்பு சொல்லுகிறார்களா?
வழக்குகளிலும் விசாரணைகளிலும் உண்மைகள் எடுத்து வைக்கப்படுகிறதா? இன்றைய சமயவாதிகளிடம் அதிகம் காணப்படுவது பணப்பற்றா? இறைப்பற்றா? நம்மில் அனேகர் தீர்ப்பை முதலில் எழுதிவிட்டுத்தானே, பிறகு சாட்சிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். திருந்துவோம். இறை வார்த்தைகள் நம்மை கடவுகளிடம் திரும்பிட அழைக்கிறது.
நம் ஆண்டவர் நீதிபரர். அவர் நீதிபதியும் கூட. அவர்தம் இரண்டாம் வருகையில் ஒவ்வொருவருக்கும் எழுதும் தீர்ப்பே இறுதியானது. நம்மேல் குற்றம் சாட்டுபவர்களுக்காக ஜெபிப்போம். குற்றமற்ற மீட்பர் நம் பாவம் முற்றும் அற நீக்குவார். நம்மை நீதிமானாக்குவார். நித்திய வாழ்வில் சேர்ப்பார் என்ற உறுதியோடு வாழுவோம்.
நீதிபரரான கடவுளே! எங்களை பொல்லாங்கின் கைகளுக்கு நீங்கலாக்கி இரட்சியும். இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.
