யோவான் 21 : 20-25 18 மார்ச், 2020-புதன்
“அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச்சாட்சி பகர்ந்து இவைகளை எழுதினவன்;…” – யோவான் 21 : 24
இயேசு கிறிஸ்துவின் முதல் மூன்று நெருங்கிய சீடர்களில் ஒருவர் யோவான் ஆவார். இந்த மூன்று பேர்களிலும் யோவான் இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு பத்மு என்னும் தீவில் நாடுகடத்தப்பட்டு மரித்துபோனார். இயேசுவின் உயரிய போதனைகளையும் எவரும் எழுதாத இயேசுவின் சத்தியங்களையும் தனது நற்செய்தி நூலில் சாட்சியாக எழுதியுள்ளார்.
இயேசுவின் திருப்பாடுகள் நேரத்தில் அவரது சீடர்கள் பலவித பயங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆளாகவே அவரை விட்டுவிட்டு தலைமறைவானார்கள். எனினும் இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் என இயேசுவின் கடைசி நேரம் வரை சிலர் உடனிருந்தனர்.
இருபது வருட நட்பு கூட சிறு கருத்து வேறுபாடு நிமித்தம் ஒரே நாளில் அழியும். ஆனால் யோவான் இயேசுவின் மேல் நட்பும் நம்பிக்கையும் அவரது பரமேறுதலுக்குப் பிறகும் வைத்திருந்தார். இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையிலும், இயேசு தான் தேர்ந்தெடுத்த சீடர்களில் ஒருவரிடம் பேசினார் என்றால் அவர் யோவான் தான். மட்டுமின்றி தன் தாயைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் இயேசு யோவானிடம் தான் ஒப்படைக்கின்றார்.
யோவான் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை தனது நற்செய்தி நூலில் எழுதி சாட்சி பகர்ந்தார். அவரது எழுத்தும் புத்தகமும் இன்றைக்கும் இயேசுவுக்கு சாட்சி பகர்கின்றன. சாட்சி கூறுவது மட்டுமின்றி எழுதி வெளியிடுவதும் உயர்ந்தது தானே! இயேசுவைப் பற்றிய சாட்சிகளை ஒரு நேரம் ஒலிப் பெருக்கியில் கூறி வாழ்வதல்ல, எழுதி பலகாலம் பலருக்கும் அறிவிக்க ஆயத்தம் ஆவோம்.
இறுதி வரை நம்பிக்கையாய் இருந்து பாடுகளை வெல்ல கடவுள் பலம் அருளுகிறார். சாட்சி பகர்வோம். கடவுள் கடைசிவரை தூய ஆவியானவரைக் கொண்டு நம்மை நடத்துவார். இந்த நிச்சயத்தில் சாட்சியிட்டு வாழுவோம்.
நித்திய கடவுளே, வாழ்வின் கடைசி நேரம்வரை எங்களைக் காத்தருளும். நாங்களும் இறுதிவரை உமக்கு சாட்சியாக வாழ அருள் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
