யோவான் 19 : 38-42 15 மார்ச், 2020-ஞாயிறு
“…அரிமத்தியா ஊரான் யோசேப்பு பிலாத்துவிடம் உத்தரவு கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவுக்குச் சீஷன்….” – யோவான் 19 : 38
குமரி மாவட்ட கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த நிலத்தில் குடும்ப கல்லறைத் தோட்டம் வைத்திருப்பதைக் காணலாம். யூதர்களும் சொந்தமாக, குடும்பக் கல்லறைகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் உடையவர்கள். ஆனால் இயேசுகிறிஸ்து தமக்கு சொந்தமாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அவரது பிறப்பிடம் சத்திரமாக இருந்தது. சொந்தமாக பயணக் குதிரைகள், கழுதைகள் கிடையாது. தலைசாய்க்க வீடும் கிடையாது. சொந்தக்கல்லறையும் இல்லை. அவருக்குத் தேவைப்பட்ட அத்தனையையும் அவரை நேசித்தவர்களே காணிக்கைகளாய் அவருக்குக் கொடுத்தனர். நம்மிடம் ஒன்றும் இல்லையானால் இந்த உலகம் மதிக்காது என இருக்கும் நிலையில், இந்த பூமிக்கே சொந்தக்காரருக்கு அடக்கம் செய்ய மண்ணில் இடமில்லை என்பது அவரது தியாக வாழ்வுக்கு சான்றாகும்.
இயேசு கிறிஸ்து இறந்த பிறகு அவரது உடல் ஆளுநர் பிலாத்து உத்தரவின்படி அடக்கம் செய்யப் பெறப்பட்டது. இதனை நேரில் சென்று கேட்டவர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு ஆவார். இயேசுவை நேசித்த சீடர்களில் இவரும் ஒருவர். அவர் தனது கல்லறையை இயேசுவுக்கு கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். எருசலேம் நகரே பயந்திருந்த வேளையில் அரிமத்தியா ஊர் யோசேப்பின் செயல் துணிச்சலாகவே இருக்கிறது. இயேசுகிறிஸ்துவுக்கு கடைசியாய் உதவியவர் என்ற பெயரைப் பெறுகிறார்.
இன்று நம்மிடம் என்ன இருக்கிறது? எத்தனையோ இருக்கலாம். அவை நம்மை பரசோக வாழ்வுக்குள் கொண்டுசெல்லாதே. சிலுவை மட்டுமே நமக்குத் தேவை! சிலுவை நம்மையும் வெறுமையாக்கட்டும். இயேசு தன்னை முழுவதுமே நமக்காக இழந்தார். நமக்காக இயேசு தரித்திரர் ஆனாரே! என்று திருமறை கூறுகிறது. நமக்கு இல்லாதவை சிலுவை நாதரால் நமக்கு நிச்சயம் அருளப்படும். அவருக்குள் குறைவின்றி வாழ்வோம். நமது குறைவுகள் கடவுளால் நீக்கப்படும் என்ற புது நம்பிக்கையைச் சிலுவையில் பெறுவோம்.
எல்லாம் நிறைக் கடவுளே, எங்கள் இல்லாமை நீக்கும்! குறைதீர்க்க அருள் தாரும்! இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.
