லூக்கா 23 : 26-31 13 மார்ச், 2020-வெள்ளி
“…சிரேனே ஊரானாகிய சீமோனைப்பிடித்து, சிலுவையை இயேசுவின் பின்னே சுமந்து கொண்டு வரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.” – லூக்கா 23 : 26
முதியவர் ஒருவர் பேருந்து ஒன்றில் ஏற ஒரு சாக்கு மூட்டையோடு காத்திருந்தார். அவருடைய பேருந்து வந்தபோது கூட்டம் அலைமோதி இவரையும் இவரது மூட்டையையும் கீழே தள்ளி விட்டார்கள். ஒரு வாலிபன் அந்த பேருந்திலிருந்து இறங்கி வந்து அந்த பெரியவரை எழுப்பிவிட்டு, அவரது சுமையையும் தூக்கி பேருந்தில் ஏற்றி, தன் இருக்கையில் அப்பெரியவரை அமரச் செய்தான்.
பிறர் உதவியே இல்லாமல் நம்மில் எத்தனை பேர் வளர்ந்து வந்தோம்? தாய், தந்தை, குடும்பம், உறவினர் நண்பர்கள் என நூற்றுக் கணக்கானவர்களின் உதவி இன்றி யாரும் வளர்ந்திருக்க முடியாதே!
இயேசு கிறிஸ்துவின் பாடுகளில் கீழே விழுதலும் ஒரு பகுதியாக இருந்தது. சிலுவை சுமக்க முடியாமல் தியங்கி தரையில் விழுந்தார் இயேசுகிறிஸ்து. அதனை நேரில் பார்த்த சட்டம் பேசுவோர், நீதிமான்கள் எவரும் அவருக்கு உதவிட வரவில்லை. சிலுவை தூக்குவோர் விழுந்திடும்போது அவனுக்கு உதவிட வேண்டும் என்ற மரபும் அக்காலத்தில் இருந்திருக்கிறது. அப்படியிருந்தும் யாரும் முன்வரவில்லை.
பஸ்கா பண்டிகை கொண்டாட சிரேனே ஊரில் இருந்து வந்த சீமோனை கீழே விழுந்த இயேசுவுக்கு உதவிட கட்டாயப் படுத்தினார்கள். கட்டாயத்தின் பேரில் வருவது எதுவும் அன்பு ஆகாதே! கருணை ஆகாதே! உதவி செய்ய மனமற்ற பக்தியும் ஆவியும் இன்று நம்மை ஆட்கொண்டிருக்கிறது. அநியாயப் பணத்திற்கு கையை நீட்டும் கைகள், உதவி செய்ய மட்டும் ஏனோ நீளவில்லை! சிலுவையை நோக்கிப் பாருங்கள். உலக மனிதருக்கு உதவி செய்து செய்து ஓய்ந்த கைகள் ஆணிகளால் கடாவபட்டிருக்கிறது. தவக்காலங்கள் நம் கரங்களை குறித்து சிந்திக்க வைக்கட்டும். இயேசுவின் கரங்கள் நமக்கு உதவிட நாள் முழுதும் நீட்டப்பட்டிருக்கிறது. பயங்கள் நீங்கி மகிழ்ச்சியோடு வாழுவோம்.
சகாயம் செய்கிற கடவுளே! எங்களுக்கு உதவி வரும் பர்வதங்களுக்கும் நேராக கண்களை ஏறெடுக்கிறோம். விழும் எங்களை தாங்கி உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
