மார்க்கு 15 : 16-20                                     12 மார்ச், 2020-வியாழன்

“அப்பொழுது போர்ச்சேவகர் அவரைக் கோட்டை மாளிகைக்குள்ளே கொண்டு போய், பட்டாளம் முழுவதையும் கூட்டினார்கள்.” – மார்க்கு 15 : 16

இரண்டு காவல்காரர்கள் சந்தையிலே திருடின ஒருவனை அளவுக்கு மீறி அடித்துக் கொண்டிருந்தார்கள். அது பார்வையாளர்களுக்கு அளவிற்கு மீறின தண்டனையாக இருந்தது. ஆனால் அதே குற்றத்திற்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றால், தீர்ப்புக்குமுன் உடல் ரீதியாகப் பெற்ற தண்டனைக்கு அர்த்தம் என்ன?

இது போலவே இயேசு கிறிஸ்துவுக்கும் தண்டனை வழங்கினர் போர்ச் சேவர்கள். தீர்ப்பில் எழுதப்படாத தண்டனைகள் கொடுமையானது தானே! சிலுவையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு பிலாத்துவின் கோட்டை மாளிகைக்குள்ளே பட்டாளம் முழுவதையும் கூட்டினார்கள். அவரை இகழ்ந்தார்கள். முகத்தில் எச்சில் உமிழ்ந்தார்கள். கோலால் தலையில் அடித்தார்கள். முட்களால் கீரிடம் செய்து தலையில் அறைந்து சூட்டினார்கள். சிலுவையில் அவரது ஆடைகளைக் களைந்து கைகால்களில் ஆணிகள் அடித்தார்கள். அவரது விலாவில் ஈட்டியால் குத்தினார்கள். இயேசுவின் சரீரத்தைப் போர்க்களம் போல் ஆக்கினார்கள்.

இவை எல்லாவற்றையும் இயேசு பொறுமையாக சகித்துக்கொண்டதுதான் இன்றும் வியப்பாக இருக்கிறது. எனினும் இயேசு கிறிஸ்து துன்பங்களுக்கு முடிவு உண்டு என்பதிலும் துன்புறுத்தப்பட்ட இந்த உடல் மறுபடியும் உயிர்பெறும், உயிர்த்தெழும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

நமது துன்பங்களுக்கும் இயேசுவின் வழியே விடியல் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம். நமது பாடுகளின் பலனை இயேசு கிறிஸ்து நிச்சயம் தருவார். துன்பங்களின் பலனைப் பெறவும் கனிகளைப் பறிக்கவும் இயேசுவின் சிலுவை நம்மை ஆயத்தம் செய்கிறது. சிலுவையருகே அமர்வோம். இயேசுவில் பரிகாரம் தேடுவோம். விடுதலை கிடைக்க சிலுவை நாதர் அருள் செய்வராக.

உயிர்தரும் இறைவா! எங்களது பாடுகள் உடலுக்கு நேரிடும் வேதனைகள், தாக்குதல்கள் யாவற்றிலிருந்தும் எங்களுக்கு விடுதலைதாரும்! இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.