லூக்கா 23 : 13-25                                    11 மார்ச், 2020-புதன்

“ஜனங்கள் ஒரே சத்தமாய்: இவனைத் தொலைத்துவிடும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கிவிடும் என்று கூச்சலிட்டார்கள்.” – லூக்கா 23 : 18

பரபாஸ் என்பவன் ஒரு கைதி. எருசலேம் நகரில் நடந்த பல கலகங்களில் ஈடுபட்டவன். கொலை பாதக செயல்களில் தொடர்புடையவன். புரட்சி வழியாக யூதர்களுக்கு விடுதலை என்பதில் உறுதியாக இருந்தவன். இவனுக்கு என்ன தண்டனை அளிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பரபாஸைப் போன்றவர்களும் அவனது கொள்கைகளையும் கொண்டு வாழ்கின்றவர்களும் இன்று ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்றனர். பயங்கரவாதம், தீவிர வாதம் வன்முறை என உலகம் எங்கும் தீ பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. அழிவின் நிலையில் இருந்து மக்களை காப்பதே கடவுளின் சித்தமாகும். ஆனாலும் தீமையா? நன்மையா? என்ற நிலை வரும்பொழுது தீமைக்கு வாக்குகள் அதிகம் விழுவதைப் பார்க்கிறோம்.

பரபாஸ் மக்களுக்கு தீமைகள் செய்தவன். பரபாசா? இயேசுவா? என்ற கேள்வி எழும்போது மக்களுக்கு விடை சரியாகச் சொல்ல முடியவில்லை. விடுதலையாளர் யார் என்பது அவர்கள் கண்களுக்கு மறைந்தே இருந்தது. பரபாசை விடுவிக்க குரல் எழுப்பினர் மக்கள். இயேசுதான் உண்மையிலே பரபாசை தண்டனையிலிருந்து விடுதலை ஆக்கினார். இல்லையெனில் பரபாசு சிலுவையில் கூட தொங்கி இருக்கலாமல்லவா?

எனக்காக இன்னொருவர் தண்டனையேற்கிறார் என்று நினைக்கும் போதே நெஞ்சம் மகிழ்கிறதல்லவா? விடுதலையாக்கப்பட்ட பரபாசின் மகிழ்ச்சியை நமக்கு இயேசுகிறிஸ்து தருகிறார். நம்மை விடுவிக்கவே இயேசு கைதியானார். தீர்ப்பு பெற்றார். சிலுவையில் தொங்கினார். பாவங்களை விட்டு விலகுவோம். நமது பாவங்களை அறிக்கையிட்டு சிலுவை நாதரை நோக்கிப் பார்த்து விடுதலை பெறுவோம்.

எங்கள் விடுதலையாளரே! இறைவா! நாங்கள் உம்மை மறக்கின்றவர்கள், எதிர்கின்றவர்கள். எப்போதும் உமது பக்கத்தில் நிற்கவும், வழி நடக்கவும் கிருபைதாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.