யோவான் 18 : 9-14 10 மார்ச், 2020-செவ்வாய்
“…அவன் அதை உருவி, பிரதான ஆசாரியன் வேலைக்காரனைத் தாக்கி, அவன் வலது காதை வெட்டினான், அந்த வேலைக்காரன் பேர் மல்குஸ்.” – யோவான் 18 : 10
தூத்துக்குடி மாநகரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள் பன்னிரெண்டுபேர் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்வை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்பாவிகள் தாக்கப்படுவது போன்று இயேசு கைது செய்யப்பட்ட போதும் ஓர் சம்பவம் நடந்தது. யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தான். போர்ச் சேவகர்கள் அவரை கைபோட்டு பிடித்தார்கள். பேதுரு ஆத்திரத்தில் தன் பட்டயத்தை எடுத்து மல்குஸ் என்பவனின் ஒரு காதை வெட்டி எறிந்தான். கீழே விழுந்த காதை எடுத்து இயேசு ஒட்ட வைத்தார். பட்டயத்தை உறையில் போடும்படியும், அதை எடுப்பவர்கள் அதனாலேயே மரிப்பார்கள் என்றும் கூறினார்.
அடுத்தவர் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கடவுள் அவரது 5ம் கற்பனையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆயுதங்களை அழிவுக்கு பயன்படுத்துவதும், உயிர்சேதங்களுக்கு பயன்படுத்துவதும் இயேசுகிறிஸ்துவின் அன்புக்கு எதிரானது. வன்முறைகளை கிறிஸ்து இயேசு எதிர்க்கிறார். ஆயுதங்களால் எந்தப் பிரச்சனைகளும் பகைகளும் மாறாது எனபதே உண்மை. நமது நாக்கும் கூட ஒரு பட்டயம் என்பதை நினைவு கூர்வோம். எனவே பட்டயங்களைத் தூக்கி எறிவோம். சிலுவைக்கும் பட்டயத்திற்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது.
இயேசு கிறிஸ்து உயிர்களைக் காக்கவே பாடுபட்டார். சிலுவை சுமந்தார். நாம் காக்கப்பட அவரது உடல் தாக்குதலுக்குள்ளானது. இந்த தவக்காலத்தில், மனித குலத்தை கலங்கப் பண்ணிக் கொண்டிருக்கிற பயங்கர வாதம் தீவிரவாதம், மதவெறி, அணுகுண்டுகள், வன்முறைகள், போர்கள் போன்ற வெறித்தனங்களிடமிருந்து நாம் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடுவோம். சிலுவை மனித குலத்தை காக்கட்டும்.
காக்கும் வல்ல கடவுளே! உயிர்ச் சேதங்களிலிருந்தும் எல்லா தீங்குகளிலிருந்தும் எங்களையும் நாட்டையும் உலகத்தையும் காத்தருள்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
