மத்தேயு 27 : 19-23                                       09 மார்ச், 2020-திங்கள்

“……அவன் மனைவி அவனிடம் ஆள் அனுப்பி : அந்த நீதிமான் காரியத்தில் உமக்குச் சம்பந்தமே வேண்டாம்;….. என்று சொல்லச் சொன்னாள்.” – மத்தேயு 27 : 19

தவக்காலத்தில் நினைக்கப்படும் பெண்களில் தேசாதிபதி பிலாத்துவின் மனைவியும் ஒருவர். தேசத்தின் ஆளுநரின் அதிகாரங்களில் தலையிடாதவள். இயேசு கிறிஸ்துவின் தீர்ப்பு விசாரணையில் தன் ஆலோசனையைத் தெரிவித்தார். இயேசுவின் தீர்ப்பிலிருந்து விலகிக்கொள்ளவே அவள் கணவனைக் கேட்டிருந்தார்.

மனைவியின் கருத்துகள் ஆளுநர் அதிகாரத்தில் இடம் பெறுதல் கூடாது. எனினும் அவளது பங்களிப்பு பிலாத்துவை தண்ணீரில் கைகளைக் கழுவச் செய்தது. பொதுவாக விசாரணை என்று வரும்பொழுது ஆண்களைவிட பெண்களிடமிருந்து அதிகமான தகவல்களைப் பெற முடியும் என்பது ஒரு நம்பிக்கையாகும். இதற்கு பிலாத்துவின் மனைவி ஓர் உதாரணம் ஆகும். ஏனெனில் பிலாத்துவின் மனைவி இயேசுவை ஓர் நீதிமான் என்று அறிந்து வைத்திருந்தார். இவள் கண்ட கனவும் கனவின் நிமித்தம் அவர் பட்ட துன்பங்களும் கடவுளின் வெளிப்பாடாகக்கூட இருந்திருக்கலாம். ஏனெனில் பிற்காலத்தில் பிலாத்துவின் மனைவி இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டதாக ஓர் மரபுச் செய்தியும் உண்டு.

எப்பொழுதும் நாம் உண்மையின் பக்கம் நிற்போம். எந்த மனிதனையும் முழுமையாக விசாரிக்காமல் தீர்ப்பு செய்ய வேண்டாம். இயேசு, யாரையும் தீர்ப்பு செய்யாதீர்கள். தீர்ப்பிடப்படுவீர்கள் என்று கூறியுள்ளார். பெரும்பான்மையின் பக்கத்தில் நியாயம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஏனெனில் பெரும்பான்மையால் உண்மையை முடிவு செய்யமுடியாது. பெரும்பான்மையான மக்கள் இயேசுவுக்கு எதிராக சத்தமிட்டார்களே. அந்த நிலையிலும் நீதிமான் வாழட்டும் என்ற பிலாத்துவின் மனைவியின் ஆலோசனை போல் நீதியின் பக்கம் நிற்க சிலுவை காட்சி நமக்கு துணை நிற்பதாக!

நீதியுள்ள கடவுளே, நாங்கள் வெளிப்படையான காரியங்களை வைத்து தீர்ப்பு சொல்லாமல், அவற்றின் ஆழமான உண்மைகளை கண்டு பிடிக்கும் ஆற்றலைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.