லூக்கா 6 : 33-36                                     27 பிப்ரவரி, 2020-வியாழன்

“…இதோ, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்.” – லூக்கா 19 : 8

பெருவியாதியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் உயிர் காக்க தம் ஆஸ்திகளை இழக்க சம்மதிப்பர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் கள்ளனிடம் தம் உடைமைகளை கொடுக்க சிலர் ஒத்துக் கொள்வர். உயிரை காப்பாற்ற இவர்கள் தம் செல்வங்களை இழக்க சம்மதிப்பர். மற்றபடி தமது செல்வங்களை தானமாய் ஏழைகளுக்கு வழங்க யாரும் முன்வருவதில்லை.

பெரும் பணக்காரனாய் வாழ்ந்த சகேயு தன் ஆஸ்திகளில் பாதியை வழங்குவேன் என்று கூறியது அவருடைய மனமாற்றத்தின் வெளிப்பாடு. இம் மனமாற்றம் அவருக்கு இயேசுவை பார்த்ததினால், அவரோடு பேசினதால், அவரோடு உணவருந்தியதால் உண்டானது. இயேசுவை சந்தித்தது அவர் வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சகேயு ஒரு வரி வசூல் செய்யும் அரசுப் பணியாளர். தன் விருப்பப்படி மக்களிடம் அநியாய வரி வசூல் செய்யும் அதிகாரம் அவருக்கு இருந்தது. இதனாலேயே அவர் பணக்காரனாக முடிந்தது. மக்கள் அவரை வெறுக்க இதுவும் ஒரு காரணம்.

ஒரு நாள் இயேசு தன் ஊருக்கு வருவதை சகேயு கேள்விப்பட்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் ஏற்பட்டது. தான் அவரைக் காண வேண்டும், ஆனால் அவர் தன்னைக் கண்டுவிடக் கூடாது என்பதற்காக அத்திமரத்தின் மேல் ஏறிப் பார்த்தார். ஆனால் ஆண்டவர் இயேசு அந்த மரத்தின் கீழ் வரும்போது அவரைப் பார்த்து, சகேயுவே இறங்கி வா நான் இன்று உன் வீட்டில் தங்கப் போகிறேன் என்றார். இந்த வார்த்தைகள் தான் சகேயுவின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஊரார் தன்னை வெறுக்க, ஒதுக்க, இயேசுவோ தான் பாவி என்று தெரிந்தும் அன்பு காட்டுகிறாரே என்று எண்ணினார். இந்த எண்ணமே அவரை மனம்மாறச் செய்தது. அந்த மனமாற்றம் ஏழைகள் பயன்பெற தன் ஆஸ்திகளை விட்டுக் கொடுக்க வழி வகுத்தது.

இயேசுவால் ஆட்கொள்ளப் பட்டவர்கள் மனமாற்றம் அடைகிறார்கள். பிறர் மேல் அன்பு செலுத்துகிறார்கள். நாம் என்ன செய்கிறோம். கடவுளின் பெயரால் சொத்துக்கள் சேர்க்கிறோமா? பிறரை ஏமாற்றுகிறோமா? முழு மனமாற்றத்தோடு பிறருக்கு அன்பின் பணிகளைச் செய்து நமது மனமாற்றத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம்.

அன்பின் இறைவா! உண்மையான மனமாற்றம் எங்களில் ஏற்பட துணை செய்யும். பிறர் மேல் கரிசனை கொள்ளும் உள்ளத்தை தாரும். உமது அன்பின் பணிகளை தொடர எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.