1 பேதுரு 4 : 12-16                                   16 டிசம்பர், 2019 திங்கள்

“ஒருவன் கிறிஸ்தவனாய்ப் பாடுபட்டால் அவன் வெட்கப்படாமல் இந்த நாமத்தினாலே கடவுளை மகிமைப்படுத்தக்கடவன்.”

– 1 பேதுரு 4 : 16

செப்திமு செவேரு என்ற ரோமைப் பேரரசன், கி.பி. 200ஆவது ஆண்டு காலத்தில், கிறிஸ்தவரை துன்புறுத்தினான். விக்கிரகங்களுக்கு முன்னால் தூபம் காட்டக் கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மறுத்தபொழுது அவர்களுக்கு ராஜ துரோகத்திற்கான தண்டனை வழங்கப்பட்டது. பெர்ப்பெத்துவாள் என்ற பெண் கல்வி கற்றவர். இயேசுவின் வழியைப் பின்பற்றினவர். விக்கிரகத்துக்குத் தூபம் காண்பிக்க மறுத்தார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் எழுதி வைத்த நாட்குறிப்புதான், கிறிஸ்தவ இலக்கியங்களில் கிறிஸ்தவப் பெண் எழுதிய முதல் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மிருகங்களின் மத்தியில் எறியப்படுவதற்காகச் சிறையிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்தனர். அப்பொழுது அவரைப் பார்த்த ஒருவர், `இவள் மோட்ச வழியில் செல்வது போல் சந்தோஷத்தோடு நடக்கிறார்’ என்று கூறினாராம். தன்னுடன் கொல்லப்பட கொண்டுவரப்பட்ட பிற கிறிஸ்தவர்களைப் பார்த்து `நீங்கள் முடிவு பரியந்தம் விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்…. நமக்கு நடைபெறுபவைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்’ என்று அந்த அம்மையார் கூறினார். அச்சம் அவர் மனதில் இல்லை என்று கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது.

ஒரு ஞானி பல ஆண்டுகளுக்கு முன்னர், `எந்த எந்தக் காரியங்களுக்காக உன் உயிரைக் கொடுக்கத் துணிகிறாயோ, அந்தக் காரியங்களைக் குறித்து வை. அப்பொழுது எதற்காக நீ வாழ வேண்டும் என்று அறிந்து கொள்வாய்’ என்று கூறினார். பெர்ப்பெத்துவாள் உயிரைக் கொடுக்கத் துணிந்த காரியங்களின் பட்டியல் மிகச் சிறியது. அது இயேசு கிறிஸ்து!  இயேசு கிறிஸ்துவின் மேல் அவர் வைத்திருந்த அன்பு பெரியது. ஏனென்றால் இயேசுவின் அன்பு, எல்லாருடைய அன்பிலும் மேலான அன்பு என்று நம்பினார். பெத்லெகேமில் பிறந்த இயேசு குழந்தை, தனது பாவங்கள் எல்லாவற்றிலிலுமிருந்தும் தன்னை மீட்க வந்தார் என்பதை, பெர்பெத்துவாள் உணர்ந்தார். பலநேரங்களில் நமது கோழைத்தனத்துக்கும், விசுவாச அறிக்கைக்கும் இடையில் போட்டி ஏற்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தைத் தெரிந்து கொள்ளுவோம். அதற்காகவே அவருக்காகவே வாழ்ந்திருப்போம். உயிர் கொடுப்போம். உங்கள் துன்பங்களும், பாடுகளும் அவரில் மகிமையாவதாக.

சகல சம்பூரணரே! உமக்காகவே வாழ்ந்திருக்கவும் தேவையெனில் உயிர் கொடுக்கவும் எங்களை தயார்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.