2 தெசலோனிக்கேயர் 2 : 15-17 10 டிசம்பர், 2019 செவ்வாய்
“…சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, …. நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.”
– 2 தெசலோனிக்கேயர் 2 : 15
இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை நமக்கு நன்றாகத் தெரியும். பைபிளையும் நாம் நன்றாக அறிவோம். இன்றைய சூழலில், பைபிள் எளிதாக நமக்குக் கிடைக்கிறது. எட்டாவது நூற்றாண்டில் வேதாகமப் பிரதி ஒவ்வொன்றும் கையினாலேயே எழுதப்பட்டன. கிறிஸ்தவ மடங்களில் வாழ்ந்த சந்நியாசிகளின் பணிகளில் ஒன்று வேதபிரதிகளை எடுத்தல் ஆகும். நகல் எடுக்கும்பொழுது மௌன விரதம் காக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் எழுதக்கூடாது. சூரிய ஒளியில்தான் பிரதிகளை எழுதவேண்டும். ஒரு எழுத்துக்கூட தவறுதலாய் வந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டவை மடத்திலுள்ள மூப்பர்கள் சரிபார்த்த பிள்னர்தான் அங்கீகரிக்கப்படும். ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், `மீட்பின் வரலாறு’ தவறாகிவிடுமே! நாள்தோறும், ஆண்டாண்டுகளாக, இவர்கள் வேதாகமத்தை நகல் எடுத்ததின் நோக்கம், இயேசு குழந்தை பெத்லகேமில் பிறந்தபொழுது தேவதூதன் சொன்ன வாக்கை நிறைவேற்றுவதுதான். `பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்குமுரிய பெரிய சந்தோஷத்தை உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறேன்’ என்பதே அந்த வாக்கு.
2 தெசலோனிக்கேயர் 2 : 14 இல் பவுல், தாங்கள் கூறி அறிவித்த `சுவிசேஷத்தினால்’ மக்கள் இரட்சிப்புக்கு அழைக்கப்பட்டார்கள் என்று கூறுகிறார். நம்மை இரட்சித்த கடவுள் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நித்திய ஆறுதலையும் நன்னம்பிக்கையையும் கிருபையாய்க் கொடுக்கிறார். அவரே எந்தச் சூழ்நிலையிலும் நம்மைத்தேற்றி, எந்த நற்செய்கையிலும் நல்வார்த்தையிலும் நம்மை உறுதிப்படுத்தி வருகிறார், (2 தெசலோனிக்கேயர் 2 : 16, 17). பரிபூரணமான வாழ்க்கையின் இலக்கணம் பவுலினால் இங்கு மிக அழகாக விளக்கப்படுகிறது. கடவுளின் அன்பு, மனிதருக்கு ஆறுதல்-நன்னம்பிக்கை! கடவுளின் கிருபை, இருதயங்களில் தேறுதல், நல்வார்த்தையில் உறுதி! இத்தனை முழுமையான ஆசீர்வாதத்தை நமக்கு அருளுவது நற்செய்திதானே. இயேசுவை விசுவாசிக்கிற மக்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவின் மகிமையைப் பெற்று வாழ வழிவகுப்பது சுவிசேஷம். சுவிசேஷம் வெளிப்படுத்தப்படுவது வேதாகமத்தில்தான். ஆகவேதான் அக்காலத்து கிறிஸ்தவ சந்நியாசிகள் கடவுளின் வார்த்தையை அக்கறையுடன், தவறு ஏற்படாமல் எழுதியிருக்கிறார்கள்.
ஆலயப் பிரசங்க மேடைகளிலிருந்தும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மூலமாகவும், அச்சடிக்கப்பட்ட தியான நூல்கள் மூலமாகவும், இன்னும் பல விதங்களிலும் இன்றைக்கும் சுவிசேஷம் பிரகடனப்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு உரைக்கப்பட்ட நற்செய்தி உபதேசத்தில் உறுதியுடன் நிலை நிற்போமாக. இதுவே, ஆண்டவரின் வருகையின் காலத்தை தியானிக்கும் சிறந்த பயனுள்ள வழி. சுவிசேஷத்தில் நிலைத்திருப்பீர்களாக.
கர்த்தாவே! உமது பரிபூரணத்தில் நாங்கள் எப்போதும் நிலைத்திருக்க வசன வழிகாட்டலைத்தாரும். ஆவியானவரின் வழிநடத்துதலைத்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
