மத்தேயு 4 : 12-16 03 டிசம்பர், 2019 செவ்வாய்
“இருளில் உட்கார்ந்திருந்த ஜனங்கள் பெரிய ஒளியைக் கண்டார்கள்…” – மத்தேயு 4 : 15
சீர்திருத்தச் செம்மல் அறிவர் மார்ட்டின் லுத்தரின் விசுவாச உறுதி நாம் அறிந்ததே. ஆனால் எப்பொழுதும் அவர் மன தைரியத்துடன் இருந்தார் என்று கூற முடியாது. ஒரு நாள் மிகுந்த மனச்சோர்வுடன், முகத்தில் துக்கம் நிறைந்தவராக அமர்ந்திருந்தார். அதைக் கண்ட அவருடைய மனைவி துக்கத்தைக் காண்பிக்கும் கறுப்பு உடைகளை அணிந்து வீட்டுக்குள் நடமாடினார். உறவினர் யாராவது இறந்து போனதை மறந்து விட்டோமா என்று லுத்தர் நினைத்தார். தன் மனைவியிடம் “ஏன் துக்க ஆடைகளை அணிந்திருக்கிறாய்?” என்று கேட்டார். “நீங்கள் துக்கத்திலிருக்கிறீர்கள். ஒருவேளை கடவுள் இறந்து விட்டாரோ என்று நினைத்து இந்த உடையை அணிந்தேன்” என்று லுத்தரின் மனைவி பதில் கூறினார்களாம்.
லுத்தர் மாத்திரமல்ல, நாமும் பல சமயங்களில் கடவுள் மரித்துப் போனது போல நடந்து கொள்கிறோம். மனச்சோர்வு, கலக்கம், உற்சாகமின்மை, பயம் ஆகியவற்றால் நாமும் பாதிக்கப்படுகிறோம். கிறிஸ்துவை அறிந்தவர்களும் அன்றாட வாழ்க்கையின் அவலங்களால் பல நேரங்களில் மன விரக்தியடைகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில், `கடவுள் இருக்கிறார். வல்லமையான ஆட்சி அவரது கரங்களிலிருக்கிறது” என்பதை உணர வேண்டும். இயேசு குழந்தையின் பிறப்பு நமது வாழ்க்கையை, நமது எதிர்காலத்தை, நமது மதிப்பீடுகளை மாற்றி அமைக்கிறது. இன்றைய தியான வசனத்தை மத்தேயு எழுதும் பொழுதே இதை அறிந்திருந்தார் எனலாம்.
இருட்டில் வாழும் மக்கள் ஒளியைக் கண்டார்கள், என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறிற்று என்று மத்தேயு எழுதி வைத்தார்.
லுத்தரும் இந்தப் பேரொளியைக் கண்டு…..
“அநாதி ஜோதி பூமிக்கு,
புது ஒளி வீசுது
அதே இராவிருளிலும்
உதித்துப் பிரகாசிக்கும்,
இரக்கமே.
இந்நீசருக்கு மோட்சத்து
வாழ்வுண்டாகிறதற்குப்
புவியில் தேவபுத்திரர் மா பரதேசியானவர்,
இரக்கமே,”
என்று 1524ஆம் ஆண்டு, பாடல் ஒன்றில் எழுதினார்.
இயேசுவை நாமும் புரிந்து கொள்ள வேண்டுமானால், தேவதூதன் இயேசு குழந்தையைப் பற்றிக் கூறிய வார்த்தைகளை நிறைவுகூர வேண்டும். அந்த வார்த்தைகள், `எல்லா ஜனத்துக்குமுரிய பெரிய சந்தோஷம்…. உங்களுக்கு நற்செய்தி இயேசுதான்” என்பதாகும். இதை ஏற்றுக் கொள்ளுவோம். இயேசு குழந்தை தரும் சந்தோஷம் உங்களை நிறைப்பதாக.
கடவுளே! துயர் மிகுந்த எங்கள் வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியாய் உமது மகனைக் கொடுத்திருக்கிறீர். அந்த ஒளியில் நாங்கள் நம்பிக்கை வைக்கவும் தைரியமாய் வாழ்ந்திருக்கவும் உதவியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.
