எரேமியா 23 : 5-6                    01 அக்டோபர், 2019 செவ்வாய்

“….கடவுளின் நீதி விசுவாசத்தில் தொடங்கி….. சுவிசேஷத்தில் வெளியாக்கப்படுகிறது.” – ரோமர் 1 : 17

15ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ நாடுகள் என்று கருதப்பட்டவைகூட `கடவுளின் வார்த்தை’யை மறந்திருந்தன. சமயச் சடங்குகள் மட்டுமே சபையில் மதிக்கப்பட்டு வந்தன. மறைத்து வைக்கப்பட்டிருந்த திருமறையின் வெளிச்சம், மார்ட்டீன் லுத்தர் என்பவர் மூலம் மறுபடியும் உலகில் ஒளி வீச இறைவன் திட்டமிட்டார். ஒரு நாளைத் தெரிந்தெடுத்தார். அது 1517ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் நாள். உலகம் எங்குமுள்ள பல திருச்சபைகள் `சீர்திருத்தல் நாள்’ என்று இதற்கு பெயர் சூட்டி, இந்த நாளைக் கொண்டாடி மகிழுகின்றனர். கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றனர். திருச்சபை சீர்திருத்தலுக்கு வித்தாய் அமைந்தது கடவுளின் வசனமே. இதற்கு ஒரு கருவியாக பயன்பட்டவர் தான் மார்ட்டீன் லுத்தர்.

மார்ட்டீன் லுத்தர், ஒரு அகுஸ்தீனிய துறவி. ஜெர்மனி நாட்டில் வித்தன்பர்க் எனும் ஊரில் உள்ள குருமடம் ஒன்றில் குருத்துவ மாணவர்களுக்குப் பேராசிரியராக இருந்தார். மாணவர்க்குப் பாடம் நடத்திட, திருமறையை ஆழமாகப் படிப்பது அவர் கடமையாக இருந்தது. ரோமர் நிருபத்தை வாசிக்கும் போதெல்லாம் அதில் வருகிற `கடவுளின் நீதி’ என்ற வார்த்தை அவருக்குப் பயத்தை உருவாக்கியது. ஏனெனில் லுத்தரைப் பொறுத்தவரை, `கடவுளின் நீதி’ என்பது கடவுளின் பரிசுத்தம்-மனிதனின் பாவம்-இதனால் உண்டாகும் கடவுளின் கோபம்-தண்டனை இவைதான்.

ஒரு நாள் மாலை, ஓர் உண்மையை வேதவசனத்தில் அவர் கண்டு கொண்டார். இதை `The Tower Experience’ என்று அழைக்கிறார்கள். அந்த வசனம் தான் சீர்திருத்தலின் வித்தாய் மாறியது. அதுவே இன்றைய தியானவசனம்.

கடவுளின் நீதியை காண்பது எங்கே? நீதிச்சட்டங்களில் அல்ல-இயேசு கிறிஸ்துவில் வெளியாக்கப்பட்ட சுவிசேஷத்தின் வழியாகத்தான் கடவுளின் நீதி வெளிப்படுகிறது. எனது பாவத்துக்கான தண்டனையைக் கடவுள் தாமே கிறிஸ்து மீது சுமத்தி விட்டார். இயேசுவின் சிலுவைப் பலி எனது பாவமன்னிப்பிற்கான இறைவனின் திட்டத்தின் நிறைவேற்றம்.

கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் பாவம் மன்னிக்கப்பட்டவன்-இதுவே கடவுளின் நீதி. கிருபையால் பாவத்தை மன்னிப்பதே, பாவியை நீதிமானாகத் தீர்ப்பிடுவதே கடவுளின் நீதி. விசுவாசத்தினால் மாத்திரமே! கடவுளின் கிருபையினால் மாத்திரமே! கடவுளின் வார்த்தையினால் மாத்திரமே! இயேசு கிறிஸ்துவில் மாத்திரமே! இந்த நீதி வழங்கப்படுகிறது. இதையே இந்த மாதம் முழுமையும் இவற்றை நாம் தியானிக்க இருக்கிறோம்.

உமது கிருபையால் இயேசு கிறிஸ்துவில் எம்மை மீட்டுக் கொண்ட கர்த்தாவே! உமது கிருபையில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை வைத்து உமது வார்த்தையில் நிலை நின்று இயேசுவில் என்றென்றும் வாழ உமது ஆவியால் எம்மை நடத்தும். ஆமேன்.