மார்க்கு 7 : 14-23 05 ஆகஸ்ட், 2019 திங்கள்
“…மனுஷனுக்குள்ளிருந்து வெளிப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்துகிறவைகளாம்.” – மார்க்கு 7 : 16
‘உள்ளத்தின் நிறைவை வாய் பேசும்’ என வேதாகமம் கூறுகிறது. மனிதனின் இதயத்தில் தோன்றும் எண்ணங்கள்தான், செயலாக வெளிப்படுகின்றன. மனிதனின் இதயத்தில் நிலை கொண்டுள்ள தீய எண்ணங்களே அவனைத் தீட்டுள்ளவனாக மாற்றுகின்றது, என்பதை இன்றைய தியானப்பகுதி தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மனித உள்ளம் தான் நன்மைக்கும் தீமைக்கும் ஊற்று! உள்ளம் இறைவனின் இருப்பிடம். ஆனாலும், உள்ளத்தில் சாத்தானும் உறங்கியெழ நாம் இடங்கொடுத்து விடுகிறோம்.
சிறு வயது தொடங்கியே நன்மையைவிட பொல்லாத எண்ணங்கள் மனதில் எளிதில் நுழைந்து விடுகின்றன. பொல்லாத செயல்கள், எண்ணங்கள் முதலில் சொந்தக்காரனைச் சேதப்படுத்துகின்றன. பின்பு சுற்றம், சூழல் அத்தனையையும் அவன் கெடுத்து விடுகிறான். நம்மிடமிருந்து புறப்படும் தீமைகள் பெருந்தீ! புகை பிடிப்பதைவிட அலங்கார மயக்கம் பிறரைக் கெடுக்கும். மது அருந்துவதைவிட, புகழ்மயக்கம் பிறரை அழிக்கக் காரணமாகி விடும். உள்ளே செல்லும் அனேகம் உன்னை மட்டும் கெடுக்கும்! உன்னிடமிருந்து புறப்படும் தீமை, உன்னை மட்டுமல்ல பிறரையும் கெடுக்கும் – அழிக்கும் வலிமை பெற்றது. எனது பெருந்தீனி, பெருமை, அன்பின்மை, பொறாமை எத்தனை பேரைக் கெடுத்திருக்கின்றது?
உங்கள் எண்ணம், செயல், எப்படிப்பட்டவைகளாக இருக்கின்றன? உங்களிடமிருந்து வெளிப்படும் தீயசெயல்கள் பிறரைப் பாதிக்கும் ‘தீட்டுகள்’ என்பதை மறக்காதீர். உங்களை மாற்றி அமைக்கவே இயேசு, சிலுவை மரணத்தை வலிந்து ஏற்றுக் கொண்டார். தீய வழிகளை மறக்க, தீமைகளை வெறுக்க, மனதில் நன்மை துளிர்விட, நல்வழி வாழ இயேசு தனது இரட்சிப்பின் திட்டத்தின் வழியே நம்மை அழைத்து, பலப்படுத்துவார். நீங்கள் திருந்த மறுத்தால்….உங்களுக்கு விடியல் வராது. உங்கள் தீட்டு உங்களையே தின்று விடும்.
இறைவா, சுத்த இதயம் உடையவர்களாக உமது வழியில் நடந்து, தூயவற்றைச் சிந்தித்து நற்காரியங் களைச் செய்ய அருள் தாரும். தினமும் எங்களில் தேவரீர் செயல்பட்டுக் கொண்டிரும். இயேசுவின் வழியே ஆமேன்.
