ரோமர் 8 : 14-17                                 29 ஜூலை, 2019 திங்கள்

“….அப்பா பிதாவே என்று கூப்பிடும் தம்முடைய குமாரனின் ஆவியைக் கடவுள் உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.” – கலாத்தியர் 4 : 6

ஜப்பான் நாட்டில் பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். பெற்றோரின் கண்டிப்பான நிலை இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பிள்ளைகள் கீழ்ப்படிகிறதில்லை என்கின்றனர் பெற்றோர். `எப்போதும் எங்கள் பெற்றோர் கோபிக்கிறார்கள்’ என்கின்றனர் பிள்ளைகள். இந்தியக் குடும்பங்களிலும் விரிசல்கள் தோன்றத் துவங்கியிருக்கிறது.

கடவுளின் குடும்பத்தில் நான் ஒரு அங்கம். தந்தையாம் இறைவனுக்கும் பிள்ளையாகிய எனக்கும் எத்தகைய உறவு இருக்கிறது என்று யோசிக்கிறேன். இறைவன் எனக்குத் தாயும் தந்தையுமாயிருக்கிறார் என்பதைச் சரியாக என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லையோ? எட்டாத இடத்தில் வைத்து, எட்டி நின்று கடவுளைப் பார்ப்பது எனது வழக்கமாகச் சிலபொழுது இருக்கிறது. சிலபொழுது கடவுளுக்கு மறைவாக வாழ விரும்புகிறேன். ஆனால் இறைவனை நமக்குத் தந்தையாகக் காட்டியவர் நமதாண்டவர் இயேசுவே. உலகில் இயேசு வாழ்ந்த போது, `தந்தை மகன் உறவில்’ இயேசுவும் பிதாவாம் இறைவனும் இணைந்து வாழ்ந்து காட்டினார். துன்பத்தில், சோதனையில் இந்த நல்லுறவுக்கு எந்தத் தடையுமில்லை. சிலுவையில் மரிக்கும் முன்பும், மரிக்கும் நேரத்திலும் `பிதாவே’ என்றழைத்தார் இயேசு. இயேசுவின் வழித்தோன்றல்களாகிய நமக்கு இறைவன் தந்தையாக இருக்கிறார். இந்த உறவையே தூயாவியானவர் நினைவுபடுத்துகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்பு, ஒருவர் தனது சொந்த ஊருக்குப் போனார். ஊரே மாறி இருந்தது. `இவர் உன் சித்தப்பா… இது உனக்குத் தங்கை உறவு…. இவன் உனது பெரியப்பா மகன்’ என்று உறவுகளை நினைவுபடுத்தினார் ஒரு பெரியவர்.

நமக்கு இருக்கிற `தெய்வீக உறவு’ ஆவியானவரால் நினைவு படுத்தப்படுகிறது. ஆவியானவர், ஊர் பெரியவர் போல், நமது உறவைச் சொல்லிக் கொடுக்கிறார். வீடு சரியில்லையெனில் மாற்றிக் கொள்ளலாம். வேலை சரியில்லையெனில் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம். தந்தையை மாற்ற முடியுமா? முடியாதே! கிடைத்தற்கரிய உறவு நமக்குக் கிடைத்திருக்கிறது. இறைவனை அப்பா-பிதாவே-னுயனனல என்று அழைக்கிற பேறு ஆவியானவர் கொடுத்திருக்கிறார். அப்பா பிதாவே எனக் கூப்பிடுவது எதற்கு? ஜெபிக்கத்தானே! ஜெபத்தின் துவக்கத்திலேயே ஆவியானவர், நமது நல்லுறவை நிலைப்படுத்துகிறார். உறவில் உறுதியாக நிலைத்திருப்போம். உரிமையுடன் வாழ்ந்து சிறப்போம்.

அன்புள்ள இறைவா! எங்களுக்குத் தாயும் தந்தையுமாக நின்று, எங்களைப் பேணிக் காக்கிறவரே! உமது நல்லுறவில் நிலைத்திருக்க பரிசுத்தாவி யானவரின் பலத்தைத் தந்திருக்கிறீர் என்ற உணர்வு எமது மனதை விட்டு அகலாதிருக்க அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.