சங்கீதம் 56 : 10-13 15 ஜூலை, 2019 திங்கள்
“கடவுளே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என் மேல் இருக்கின்றன.” – சங்கீதம் 56 : 12
மனிதர்கள் தெய்வத்திற்குப் பொருத்தனை செய்வது இன்று, நேற்றல்ல, தொன்றுதொட்டே கையாளப்படுகிறது. மழை பெய்து நன்றாக விளைந்தால் 2 மூட்டை திருச்சபைக்குக் காணிக்கை கொடுப்பேன்… மகள் ஐ.ஏ.ஸ் தேர்வில் பாஸ் செய்தால் மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுத்து ஊழியத்தைத் தாங்குவேன்… இறைவா! கடலுக்குள் போகிறேன். மீண்டும் கரைக்கு நல்ல முறையில் கொண்டு வந்தால் நான் பிடிக்கும் மீன்களில் நான்கில் ஓர் பங்கினை உமக்கு வழங்குவேன்… என்பது போன்ற பொருத்தனைகள் இன்றைக்கும் தொடருகின்றன.
இறைமக்கள் பொருத்தனை செய்வதில் தவறு ஏதுமில்லை. ஆனால் வேண்டிக்கொண்டது போலவே, கை மேல் பலன் கிடைத்த பிற்பாடு, பொருத்தனைகளை செய்ய நம்மில் பலர் மறந்து விடுகிறோம். பொருத்தனை செலுத்த வேண்டிய சமயத்தில், பொருளாதார நிலை, மனநிலை, சபைநிலை போன்றவற்றைச் சார்ந்து சிலபொழுது நமது பொருத்தனைகள் கைவிடப்படுகின்றன. இறைவன் ஆபத்தில் நம்மைக் காப்பாற்றுகிறார், நம்முடன் வாழ்கிறார். நம் செயல்களைக் கவனிக்கிறார், நம்மைப் பார்த்துக் கொள்கிறார். நாம் செய்த பொருத்தனைகள் அவருக்கு ஞாபகத்தில் இருக்கும். இதைத்தான், `நாம் செய்த பொருத்தனைகள் நம்மேல் இருக்கிறது’ என்கிறது தியான வசனம்.
திருமணத்தில் கூட, தேவ சந்நிதியில் பொருத்தனை செய்கிறோம். `மரணம் நம்மைப் பிரிக்குமளவும்… நான் உன்னைக் கவனித்துக் கொள்வேன்… நான் உன்னிடம் அன்புடன் இருப்பேன். நீ என்னிடம் அன்பாக இருப்பாய்’ என்று கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பொருத்தனை செய்கிறார்கள். இந்தப் பொருத்தனை குடும்ப வாழ்வின் இணைப்பு என்பதை மறக்காமல் இருப்போம். என் கண்ணீர் உமது கணக்கில் இருக்கிறது. என் அலைச்சலை கணக்கிட்டிருக்கிறீர்.(சங்கீதம் 56:8) என்றெல்லாம் தாவீது கூறினார். நமது பொருத்தனைகளும் கடவுளின் கணக்கில் இருக்கும் என்பது தெளிவு.
நமது பாவத்தின் சுமையைக் கடவுள் கணக்கிலெடுத்ததினால்தான், பாவப்பரிகாரியாக இயேசுவை அனுப்பினார். இயேசு நமது பாவக்கடனைச் செலுத்தித் தீர்த்தார். நாமும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டோம். நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழுவோம் என்று திருமுழுக்கில், திடப்படுத்தலில் பொருத்தனை பண்ணினோம். இந்தப் பொருத்தனையைச் சாவு வரை நாம் சுமந்து செல்கிறோம். நாம் செய்த பொருத்தனை நாம் சுமந்து திரியும் உரிமைகள். இவற்றை நிறைவேற்ற விழிப்புடன் இருப்போம். பொருத்தனைப் பாரத்தைச் சுமக்க, கடவுளின் கிருபை பலம் தரட்டும்.
மனிதனை மீட்க இயேசுவை அனுப்பியவரே! இயேசுவை விசுவாசித்து உமது பிள்ளையாக வாழுவேன் என்று நான் செய்த பொருத்தனை என் மீது உள்ளது. அதை நிறைவேற்றுகிற ஆவியின் பலத்தைத் தாரும். இயேசு வழியே ஆமேன்.
