சங்கீதம் 51 : 16-19 08 ஜூலை, 2019 திங்கள்
“….அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையில் சௌரக்கத்தி படுவதில்லை என்று பொருத்தனை பண்ணினாள்.” – 1 சாமுவேல் 1 : 11
அன்னாள் என்பவருக்குக் குழந்தை இல்லை. இதனால், அவர் அடைந்த துன்பங்கள் பல. தனக்குக் குழந்தை பிறக்குமானால், அவனை வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன் என அன்னாள் ஜெபித்தார், பொருத்தனை பண்ணினார். இறைவன் அவளுக்கு ஒரு குழந்தையைக் கட்டளையிட்டார்.
இங்கு பொருத்தனை ஒரு வேண்டுதல். மன்றாடுதல்- பிரார்த்தனை என்ற அளவில் பொருள் பெறக் காணலாம். கர்த்தருடைய பாதப்படியில் நான் நின்று, மன்றாட்டுகளை ஏறெடுப்பதும், முறையிடுவதும் ஒரு வகையில் பொருத்தனை என்று நம்புகிறேன். இதன் மூலம் நான் எனது முழு ஆவியையும் அவர் சமூகத்தில் ஊற்றி விடுகிறேன். எனது ஐம்புலன்களும் இறைவனிடத்தில் அடைக்கலமாகி விடுகின்றன. இந்தத் தியானங்களை வாசிக்கும் போது கூட, சில நிமிட நேரங்கள் நான் இறைவனின் காலடியில் நிற்கிற உணர்வு பெறுகிறேன். பொருத்தனை என்பது வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கப்படுகிற ஓர் தொடர் நிகழ்ச்சி என்ற செய்தியைத் தியானப்பகுதி எனக்குக் கொடுக்கிறது. கடவுளுக்குச் சேவை செய்ய முன் வரும் பொருத்தனை மிகவும் போற்றுதற்குரிய பொருத்தனை என்ற மேலோங்கிய உணர்வு என்னை நிறைக்கிறது.
வாழ்நாள் முழுவதும் இறைவனை நினைக்க, வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கே சேவை செய்ய நான் அர்ப்பணிக்கப்பட்டவன். நான் பெற்ற ஞானஸ்நானத்தின் அர்த்தம் இதுதானே. இயேசு எனக்காகத் தன்னையே கொடுத்தார். இதன் விளைச்சலாக, நான் என்னை இயேசுவுக்குக் கொடுக்கிறேன் என்றெல்லாம் நினைக்கையில் பொருத்தனையில் ஒரு பதிற்செயலும் அடங்கியிருக்கிறது என்றும் தெரிகிறது. பொருத்தனை சேவை செய்ய ஒரு மூலதனம். எனது பொருத்தனைக்கு முன்பே கடவுள் என்னைச் சொந்தமாக்கினார். எனது பொருத்தனையில் எனக்குக் கிடைத்த இந்த உறவை நான் உறுதிப்படுத்துகிறேன். ஆகவே பொருத்தனை எனது தேவ சேவைக்கு மூலதனம். பொருத்தனை மூலம் சேவை செய்ய மனிதர்களைக் கடவுள் அழைக்கிறார். இதனையே `அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்’ என்றும் சுட்டிக் காட்டுகிறாரோ என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை இந்த தியானத்தைப் படிக்கிற யாராவது தேவ ஊழியத்துக்குத் தங்களை ஒப்புக் கொடுக்கலாமே என்று கூட என் மனதில் ஒரு மகிழ்ச்சி எழுகிறது.
ஆண்டவரே! வாழ்நாள் எல்லாம் என்னை உமக்கு ஒப்புக் கொடுக்கும் துணிவை எனக்குத் தாரும். என் பணியை ஆசீர்வதியும். உமக்குப் பணி செய்யும் பொருத்தனைத் துணிவை தந்திடும். இரட்சகர் வழியே ஆமேன்.
