சங்கீதம் 145 : 8-14 04 ஜூலை, 2019 வியாழன்
“யாதாமொருவர் ஒரு பொருத்தனை செய்து அதை நிறைவேற்ற வரும்போது……” – லேவியராகமம் 27 : 2
இஸ்ரவேல் மக்களிடையே, `பொருத்தனை’ என்பது பக்திக்குரிய செயலாகவே எண்ணப்பட்டு வந்தது. கடவுள் நமது விருப்பங்களை நிறைவேற்றுகிறார். நாம் அவருக்குப் பிரியமானதைச் செலுத்தி நமக்குப் பிரியமானதைப் பெறுவோம் என்ற எண்ணமே `பொருத்தனையாக’ வெளிப்பட்டது. லேவியர் புத்தகத்தில், நமது தியானப்பகுதி ஒரு சிறப்பான பொருத்தனை பற்றிக் கூறுகிறது. இஸ்ரவேலரில் சிலர், ஆலயத்துக்கென கூடாரப்பணிக்கென பிள்ளைகளை அடிமைகளாக நேர்ச்சை செய்யும் பழக்கம் வைத்திருந்தனர். ஆலயப்பணி செய்தல், லேவி கோத்திரத்தாருக்கு உரிமையானதாகும். அப்படியானால் நேர்ச்சை செய்தவர்களை என்ன செய்வது? இதற்கும் ஓர் ஒழுக்கம் இருந்ததைத் தியானவசனம் சுட்டிக் காட்டுகிறது. ஆலயத்திற்காக நேர்ந்து விடப்பட்டாலும், ஆலயத்தின் சட்டதிட்டத்திற்கு ஏற்புடையதல்லாததாக நேர்ச்சைப் பொருள் இருந்தால், அதற்கு ஈடாகப் பணம் கொடுத்து நேர்ச்சைப் பொருளை மீட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது. ஏழைகளுக்கு, இல்லாதவர்களுக்கு பொருத்தனைச் சலுகைகள் வழங்கப்படலாம். தங்கள் திராணி, திறமைக்கு ஏற்றாற் போல் பொருத்தனை செலுத்த உரிமைகளும் தரப்படலாம் என்பதை இந்த `பொருத்தனை மீட்பு’ ஒழுக்கம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
பொருத்தனை செலுத்துவோரின் தேவைகள், வேண்டுகோள் விடுப்பவரின் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவது கடவுளின் சுத்த இரக்கத்தினாலேயே என்பதை உணர்தல் வேண்டும். கடவுள் தமது இரக்கத்தினால் மனிதரிடம் செயலாற்றும் முறையை ஏற்றுக் கொள்கிற பக்தி செயல்களில் ஒன்று பொருத்தனை என்று கூறலாம். பொருத்தனைகளை இறைவன் ஒருபோதும் கட்டாயப் படுத்துகிறதும் இல்லை என்பதையும் `மீட்பு ஒழுக்கம்’ சுட்டிக் காட்டுகிறது. தேவ இரக்கம், தேவ மீட்பு நேர்ந்து விடுதலிலும் – பொருத்தனை செலுத்தலிலும் எத்தனை தெளிவாக விளங்குகிறது? இறைவனது இரக்கங்கள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. தோத்திரம் செலுத்துவோம். பொருத்தனை செய்யமுடியாவிட்டாலும் அச்சம் கொள்ளாதிருப்போம். பொருத்தனை பெரிதல்ல. பொருத்தனையையே மீட்கின்ற கடவுளின் இரக்கத்திற்குள் அடைக்கலம் புகுவோம்.
கடவுளே! உமது இரக்கம் எங்கள் தேவைகளில் அதிகமாய் ஊறிப் பெருக அருள்தாரும். பொருத்தனை கட்டாயமல்ல என்ற உணர்வைத் தந்ததற்காகவும், உமது இரக்கத்தின் விளக்கத்தை உணரச் செய்ததற்காகவும் தோத்திரம். அயேசுவின் வழியே ஆமேன்.
