1 தீமோத்தேயு 2 : 1-4 30 ஜுன், 2019 ஞாயிறு
“…ராஜாக்களுக்காகவும் அதிகாரிகள் யாவருக்காகவும் அப்படிச் செய்ய வேண்டும்.” – 1 தீமோத்தேயு 2 : 2
மனிதன் ஓர் சமூகப் பிராணி என்று சொல்லுவார்கள். அவனால் தனித்து வாழ முடியாது. சமூகமாக வாழ்ந்து பழக்கப்பட்டவன். சமூகம் தனி மனிதனையும், தனி மனிதன் சமூகத்தையும் சார்ந்தே வாழ வேண்டும்.
ஆதித் திருச்சபை கூடி வழிபட்டது. கூடி ஒருமனதோடு ஜெபித்தது. அதே சமயம் நாட்டு மன்னர்களுக்காக, அதிகாரிகளுக்காகவும் ஜெபித்தது. அவர்கள் கொடுங்கோலர்களாக இருந்தாலும் நேர்மையற்றவர் களாயிருந்தாலும் அவர்கள் வாழ்வுக்காகவும் நல் ஆட்சிக்காகவும் ஜெபித்தது. கிறிஸ்தவம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் நல்ல குடி மக்களாக வாழவே விரும்புகிறது. ஆதித் திருச்சபைப் பிதாக்களான ‘தெர்துல்லியான், கிளமென்று’ போன்றவர்கள் நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஜெபத்தை முக்கியப்படுத்தினார்கள். பக்தி என்பது கடவுளுக்குப் பயந்து வாழும் வாழ்வையே குறிக்கும். நல்லொழுக்கம் என்பது கண்ணியமான வாழ்வையே குறிக்கும்.
நாம் வாழும் இடங்களில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ விரும்புகிறோம். இதற்காக கடவுளே சகல அதிகாரங்களையும் ஏற்படுத்துகிறார். அவராலன்றி ஒரு அதிகாரமுமில்லை. அரசர்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் யாவரும் கடவுளின் பிரதிநிதிகள். எனவே நமக்கு இவர்களைக் குறித்த கரிசனை மிக அவசியமானது. நம் ஜெபங்கள் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். இதைத் திருமறையும் உலக வரலாறும் நமக்குத் தெளிவு படுத்துகின்றன. நாமும் நம்மைச் சுற்றி வாழுகிற மக்களும் நலமாக சமாதானமாக வாழ வேண்டும். கடவுளே எல்லாவற்றையும் அரசாளுகிறார். இந்த உணர்வோடு யாவருக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும்.
கடவுள் ராஜாதி ராஜா. அவர் உலகை ஆளுகிறவர். தம் மக்கள் வழியாக இதைச் செய்கிறார். இந்த எண்ணம் இருக்க வேண்டும். அதனால் கடவுள் அமைத்துத் தருகிற ஆளுகையில் மகிழ்ச்சி காண்போம். நம்மை ஆளுகிறவர்களுக்காக ஜெபிப்போம். நம் வாழ்வு பிறருக்கு உதவ வேண்டும். பிறர் வாழ்வு நமக்கு உதவ வேண்டும்.
ராஜாதி ராஜாவே! உமது ஆளுகையில் உமது நேசகுமாரன் வழியாக எங்களைக் கொண்டு வந்திருக்கிறீர். நன்றி. அது போலவே உலக ஆளுகைகளையும் ஏற்படுத்துகிறீர். அவர்களுக்காக, நல்லாட்சிக்காக ஜெபிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
