பிலிப்பியர் 4 : 4-7 25 ஜுன், 2019 செவ்வாய்
“நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லா விஷயத்திலும் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடுகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.” – பிலிப்பியர் 4 : 6
சந்தோஷமாயிருங்கள் என்று ஏற்கெனவே வலியுறுத்துகிற கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார். எப்பொழுதும் என்ற சொல் எல்லா சூழ்நிலைகளிலும் என்று பொருள்படும். அது போலவே சாந்த குணம் என்னும் கிறிஸ்தவனுடைய சிறந்த நடத்தை எல்லா மக்களுக்கும் வெளியரங்கமாக இருக்க வேண்டும். எல்லா மக்களும் ஏற்கும் குணமுடையவராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. காரணம் கடவுள் எல்லாருக்கும் அருகில் எப்பொழுதும் இருக்கிறார் என்பதே.
கவலைப்படாமல் என்ற சொல் எதிர்காலம் இல்லையோ என்று அஞ்சி துவண்டு விடாமல் இருங்கள் என்றும் பொருள்படும். சபையார் தங்கள் தேவைகள் பிரச்சனைகள் எதுவாயிருந்தாலும் அவற்றைக் கடவுளிடம் கூற அழைக்கிறார். நாம் நமது விண்ணப்பங்கள் தனியான தேவைகள் பிறரின் தேவைகள் எல்லாவற்றையும் கடவுளுக்கு ஜெபத்தின் வழி தெரியப்படுத்த வேண்டும். விண்ணப்பங்களுக்கு முன் கடவுளிடம் நாம் பெற்ற அனைத்து ஈவுகளுக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் கடவுள் அருளிய ஈவுகளை அவரின் கிருபைகளை நினைத்துப் பார்க்காமல் இருப்பது தவறு. அதை அறிந்தால் எதிர்கால ஆசீர்வாதங்களின் நிச்சயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
சமாதானம் என்று பொருள்படும் சாலோம் என்ற சொல்லுக்கு கடவுளுடனும் பிற மக்களுடனும் சரியான உறவு நிலையை ஏற்படுத்தி முழுமையான வாழ்வு வாழ்வதைக் குறிக்கும். பிறருடன் சரியான உறவு நிலை உருவாக்குதல், சமத்துவம் அளித்தல், சரியான தொடர்பு இல்லாதிருத்தல் இவை சமாதானத்தைக் கொண்டுவராது. இங்கே சமாதானம் என்ற சொல் இராணுவ வீரர்களின் பாசறையில் காவல் காப்போரின் செயலைப்போன்றது. கடவுளின் சமாதானம் நம்மைக் காவல் காக்கும். கிறிஸ்து நமக்கு விட்டுச் சென்ற சொத்து சமாதானம்.
விண்ணப்பம் – தோத்திரம் – ஜெப வேண்டுதல் இவையெல்லாம் நம் பிரச்சனைகள் வேதனைகள் போன்றவற்றை கடவுளுக்குத் தெரியப்படுத்தும் முறைகள். நன்றி கூறல் இல்லாமல் ஜெபம் இல்லை. அதனால்தான் நாம் எல்லா விஷயங்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் ஜெபங்கள் கேட்கப்படாவிட்டாலும் அதிலும் கடவுளுக்கு ஒரு நோக்கம் இருக்கும். இதை உணர்ந்து நன்றி செலுத்தி வாழுவோம்.
இயேசுவில் எங்களை அழைத்திருக்கிற கடவுளே! நாங்கள் பெறுகிற அனைத்திற்கும் நன்றி செலுத்தவும் தேவையானவற்றை நம்பிக்கையோடு கேட்க, உம் சித்தப்படி பெற கிருபைசெய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
