ஆதியாகமம் 32 : 24-30                               03 ஜுன், 2019 திங்கள்

“…நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்…” – ஆதியாகமம் 32 : 26

நாம் பிறருக்கு எதிராகத் தவறு செய்யும் போதும், தீங்கை நடப்பிக்கும் போதும் நம் உள்ளத்தில் ஓர் உறுத்தல் இருக்கும். எவ்வளவு காலமானாலும் அந்த பயமும் மன உறுத்தலும் நம்மை விட்டு நீங்காது.

யாக்கோபு தன் சகோதரன் ஆசீர்வாதத்தை ஏமாற்றிப் பெற்றுக் கொண்டான். ஏசாவின் சிரேஷ்டபுத்திர சிலாக்கியத்தையும் பெற்றுக் கொண்டான். தன் சகோதரனுக்குப் பயந்து தன் மாமன் வீட்டிற்கு ஓடினான். தற்போது மனைவிகள், பிள்ளைகள், வேலையாட்கள், திரளான ஆடுமாடுகளோடு சொந்த ஊருக்கு திரும்பி வருகிறான். யாப்போத்து ஆற்றைக் கடந்து எல்லாரையும், எல்லாவற்றையும் கரை சேர்த்தான். இச்சமயம் ஒருவர் தன்னோடு போராடுவதை உணர்ந்தான். விரைவில் தன்னோடு போராடுகிறவர் கடவுள் என்று அறிந்து கொண்டான்.

தற்போது யாக்கோபின் பயம் அதிகமாயிற்று. தான் தன் சகோதரனையும் தகப்பனையும் மட்டும் ஏமாற்றவில்லை. முதலில் கடவுளை ஏமாற்றியிருக்கிறேன் என்பதை உணர்ந்தான். அதனால் முதலில் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும். கடவுளோடு ஒப்புரவானால் தான் சகோதரனோடு ஒப்புரவாக முடியும் என்று தீர்மானித்தான். தன் சகோதரன் பழிக்குப் பழிவாங்குவான். இந்த ஆபத்திலிருந்து கடவுள் ஒருவரே தன்னைக் காப்பாற்ற முடியும் என்று நம்பினான். எனவே தன்னோடு போராடிய கடவுளிடம் நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்று இறுகப் பற்றிக் கொண்டான்.

கடவுள் யாக்கோபின் மனநிலையை அறிந்து அவனை ஆசீர்வதித்தார். யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றி அமைக்கப்படுகிறது. இம்மாற்றத்தின் வழியாக கடவுளின் வாக்குறுதி நிறைவேறுகிறது, வரலாறு தொடர்கிறது. இங்கு சிறப்பிடம் பெறுபவர் கடவுளே.

நாம் பிறருக்கு எதிராகப் பாவம் செய்யும் பொழுது கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறோம் என்பதை உணரவேண்டும். தனிமையிலும் பயத்திலும் கைவிடப்பட்ட நிலையிலும் கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணருவோம். நம்பிக்கையோடு கடவுளை பற்றிப் பிடிப்போம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம். கடவுளின் பிள்ளைகளாய் வாழுவோம்.

ஆசீர்வதிக்கிற கடவுளே! உம் நேசகுமாரனில் நீர் எங்கள் பாவங்களிலிருந்து விடுவித்து ஆசீர்வதித்ததற்காக நன்றி செலுத்துகிறோம். உம் கட்டளைகளின் படி நடந்து ஆசீர்வாதங்களைப் பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.