உபாகமம் 15 : 12-18                                      16 மே, 2019 வியாழன்

“உன் கடவுளாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கபடியே… உள்ளவைகளில் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடு.” – உபாகமம் 15 : 14

குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் சிறைத் தண்டனை பெறுகின்றனர். இதன் வழியாக அவர்கள் திருந்த வேண்டும் என்பதே சிறைத் தண்டனை கொடுக்கப்படுவதன் நோக்கம். சிறையில் இருக்கும் போது அவர்கள் உழைக்க வேண்டும். கைத் தொழில் கற்க வேண்டும். தண்டனை முடிந்து வெளியே வரும்போது சிறையில் ஒருவர் செய்த வேலைக்கு உரிய கூலியைக் கொடுத்து அனுப்புவார்கள்.

மூதாதையார் காலத்தில் அடிமை வியாபாரம் நடைமுறையில் இருந்தது. ஏழைகள் அடிமைகளாக்கப்பட்டார்கள். அப்படி அடிமைப்பட்டவர்கள் ஆறு வருடம் அடிமைகளாக வேலை செய்வார்கள். ஏழாம் ஆண்டு அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும். அப்படி விடுதலை செய்யும்போது விடுதலை செய்யவேண்டிய காரியங்களை நமது தியான வாக்கிய பகுதி விவரிக்கிறது. அடிமை ஆறுவருடம் கடினமாக வேலை செய்வான். அவன் வேலையின் பலனாய் உன் ஆடுமாடுகளும், விளைச்சலும் பெருகும். அவனால் கடவுள் உன்னை ஆசீர்வதிக்கிறார். ஏழாம் ஆண்டு அடிமையை விடுவிக்க வேண்டும். விடுவிக்கும் போது நீ எகிப்தில் அடிமையாய் இருந்ததை நினைக்க வேண்டும். அவன் இடத்தில் உன்னை நிறுத்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் நீ அவனை வெறுங்கையாய் அனுப்பமாட்டாய், அனுப்பக் கூடாது. அவனுக்கு உன் ஆட்டு மந்தையிலுள்ள ஆடுகளையும், களத்தில் நீ பெற்றிருக்கிற விளைச்சலின் பலனிலும் அவன் வாழ்வு பெற தர்மமாக கொடுத்து அனுப்ப வேண்டும்.

கடவுள் ஆசீர்வாதம் அருளுவது பிறரை ஆசீர்வதிப்பதற்காகவே என்பதை உணரவேண்டும். கடவுள் ஆபிரகாமிடம், ‘நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னில் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும்’ என்பதன் நோக்கம் இதுவே. அதனால் கடவுள் நமக்கருளிய ஆசீர்வாதத்திற்கு ஏற்றார்போல் அடிமைக்கு தர்மம் கொடுத்து அனுப்பவேண்டும். வெறுங்கையாய் அனுப்பக்கூடாது என்று கட்டளையிடுகிறார். கடவுள் நமக்குத் தாரளமாய் ஆசீர்வதங்களை அருளுகிறார். ஆசீர்வாதங்களை நமக்கு அருளுவது நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கவே என்பதை மறந்து போகாமல் இருப்போம். பணி செய்கிறவனுக்குக் கொடுக்கிற கடவுளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தர்மம் கொடுப்போம். கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! உம் அற்புதமான செயல்களை எங்கள் வாழ்வில் கண்டு கொள்ளவும் அவற்றை பிறருக்கு தர்மம் செய்யவும் உதவி புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.