ரோமர் 8 : 12-17                                                    25 ஏப்ரல், 2019 வியாழன்

“நாம் கடவுளின் பிள்ளைகளென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியோடுகூடச் சாட்சி கொடுக்கிறார்.” – ரோமர் 8 : 16

நீதிமன்றத்தில் சாட்சிகளின் வாய்மொழியை ஆதாரமாகக் கொண்டுதான் தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. அதுபோல, `கிறிஸ்துவே’ ஆண்டவர் என்று ஒரு விசுவாசி நம்பவும், அறிக்கையிடவும் ஆவியானவர் நம்முடைய உணர்வோடு – ஆவியோடு சேர்ந்து சாட்சி கொடுத்து உறுதிப்படுத்துகிறார். `நான் கடவுளின் பிள்ளை’ என்று என் ஆவி, உணர்வு மனம் உறுதியாகச் சொல்லுகிறது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் எனக்கு என்னைப் பற்றி சாட்சி கொடுத்திருக்கிறார்.

தூய ஆவியானவரின் சாட்சி நமது உணர்வை, ஆவியைத் தூண்டி விடாவிட்டால், இயேசு ஆண்டவராய் இருக்கிறார், நான் கடவுளின் பிள்ளை என்று யாராலும் நம்பவும் சொல்லவும் இயலாது. நமக்குத் துன்ப துயரங்கள் ஏராளம் உள்ளன. விசுவாசப் போராட்டங்களும் எனக்கு இருக்கிறது என்றாலும் பாடுகளைத் தாங்க பரிசுத்த ஆவியானவர் எனக்குப் பலம் தருகிறார். பாடுகளின் மத்தியிலும், என் மீட்பர் கிறிஸ்துவை எனக்குச் சுட்டிக்காட்டி, எனது விசுவாசத்தை உறுதிபடுத்துகிறார். பவுல் தீமோத்தேயுவுக்குக் கூறியது போல, நாம் பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்மை அடிமைகளாக்கி அச்சத்தில் நம்மை அழிக்கும் ஆவியன்று. பலமும் அன்பும் நிதானபுத்தியும் நிறைந்த ஆவியானவர் அவர். நாம் கடவுளின் மைந்தர்கள் என்னும் பாக்கியத்தை ஆவியானவர் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

தூயாவியானவரால், கடவுளின் சகல ஆசிகளையும் பெறும் பங்குதாரர்கள் ஆகிறோம் நாம். கடவுளின் வாரிசுகளாகவும், கடவுளின் உரிமைகளில் உடன் பங்காளிகளாகவும் ஆக்கப்படுகிறோம். இவை அனைத்திற்கும், ஆவியானவரின் `சாட்சிக்குரல்’ திருவசனத்தின் வழியாகத் தினமும் நம்மைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஆவியின் சாட்சியைப் பெற்றவர்களுக்கு, ஆவியின் வரங்கள் கிருபையாக அருளப்படுகின்றன. ஆவியின் வரங்கள் சுய திறமையால் நாம் சம்பாதிப்பவை அல்ல. ஆவியின் வெவ்வேறு வரங்கள், பொது நலத்திற்கென்று விசுவாசிக்கு அருளப்படுகிறது. வரப்பிரசாதம், ஆவியின் சாட்சியின் வெளிப்படை நிரூபணம். நான் கடவுளின் பிள்ளை. இயேசுவின் கிருபை என்னைச் சந்தித்திருக்கிறது. பரிசுத்த ஆவி என் ஆவியில் – மனதில் – உணர்வில் பேசுவதை நான் அறிகிறேன். தோத்திரத்தோடு ஆவியில் தரித்திருப்பேன்.

பாடுகளின் மத்தியிலும் எங்களுக்காகப் பரிந்து பேசுகிற இறைவா! சுமையை எளிதாக்கும் உமது சிலுவைச் சுமையைவிட பாரமான சிலுவை என்னை அணுகவிடாதேயும். `நான் கடவுளின் பிள்ளை’ என்ற ஆவியின் சாட்சியக் குரலை தினமும் நான் கேட்க செய்யும். இயேசுவின் வழியே  ஆமேன்..