1 சாமுவேல் 16 : 10-18 12 ஏப்ரல், 2019 வெள்ளி
“…அந்நாள் முதல் கர்த்தருடைய ஆவி தாவீதின் மேல் வல்லமையோடு வந்து இறங்கினது…” – 1 சாமுவேல் 16 : 13
இஸ்ரவேலின் முதல் அரசர் சவுல். சவுலை அபிஷேகம் செய்த சாமுவேல், புதிய அரசனையும் ஏற்படுத்தக் கடவுளிடம் கட்டளை பெற்றார். கடவுளின் விருப்பத்திற்கு மாறான மன்னனாக வாழ்ந்தார் சவுல். ஆகவே சவுலின் அரசாட்சிக்கு முற்றுப் புள்ளி போடப்பட்டது. கடவுளின் அருளால் சவுலின் இடத்தில் தாவீது தெரிந்து கொள்ளப்பட்டார். தீர்க்கர் சாமுவேலால், இஸ்ரவேலின் அரசராகத் தாவீது அபிஷேகம் செய்யப்பட்டார்.
தாவீது கடவுளின் ஆவியால் நிரப்பப்பட்டார் என்று தியானப் பகுதியில் விளங்குகிறது. ஈசா என்பவரின் இளைய மகன் தாவீது. மனிதர் பார்வையில் இவர் பலவீனமானவர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர். போர் தளவாடங்களைப் பயன்படுத்தத் தெரியாதவர். மனிதர் புற அழகை எடை போடுகின்றனர். ஆனால் கடவுள் மனிதரின் வெளித் தோற்றத்தையல்ல, உள்ளத்தை அறிகிறவர். தாவீதின் மனதைக் கடவுள் அறிந்தார். தாவீது பிற்காலத்தில் நல்ல போர் வீரனாக, அரசனாக, திட்டமிட்டுச் செயல்படும் தலைவனாக விளங்கினார். இதற்கும் மேல் அவர் ஒரு கவிஞர், பாடகர், இசைக்கருவி மீட்டுபவர். ஆடு மேய்க்கும் அற்பமான வேலையின் வழியே, அற்புதமான அர்த்தமுள்ள பல திறமைகளைக் கடவுள் தாவீதிடம் வளர்த்தார். தாவீது என்றைக்கு மன்னராக அபிஷேகம் செய்யப்பட்டாரோ, அன்று முதல் கர்த்தருடைய ஆவியானவர் அவரிடம் இறங்கியிருந்தார். கடவுளின் ஆவி தாவீதின் மேல் இருந்தது. பிற வளங்களுடன் – கவிதை புனையும் வளத்தால் அவர் கடவுளின் சித்தம் செய்ய ஆவியானவர் அவரில் இறங்கினார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
கடவுளைச் சார்ந்து வாழுகிற எவருக்கும் ஆவியானவர் அருளப்படுகிறார். ஆவியானவர் தருகிற வல்லமைகள், திறமைகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. என்றாலும் அத்தனை நல்ல வளங்களும், தேவனை மகிமைப்படுத்தவும், தேவ ஜனத்தை வழி நடத்தவும் பயன்படுகின்றன. நாம் தூய ஆவியைப் பெற்றவர்கள். கடவுளுக்குப் பயன்பட நம்மை ஆவியானவர் பலப்படுத்துகிறார். பிறருக்குப் பயன்படவும் ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார். எழுதுகிற, பாடுகிற, வரைகிற, பேசுகிற எந்த நல்ல வரத்தையும் கடவுளின் ஆவி நமக்கு அருளுகிறார். இந்த வளங்களை தேவ மகிமைக்காகப் பயன்படுத்துவோம்.
பலவீனமான எம்மை, உமது பணிக்கென்று தெரிந்தெடுத்த பரமபிதாவே! உமது ஆவியின் வல்லமை பல வகைகளில் வெளிப்படுவது புரிகிறது. என்னிடம் நீர் தந்திருக்கிற ஆவியின் வரத்தைப் புரிந்துகொள்ள, எனக்கு நீர் தருகிற வசனத்தின் வழி நடத்துதலை உணரச் செய்யும். வார்த்தையாம் இயேசு வழியே ஆமேன்.
