யோவான் 3 : 12-17 27 பிப்ரவரி, 2019 புதன்
“பூமிக்கு உப்பு நீங்களே; உப்பு சாரமற்றுப் போனால் எதினால் சாரமேற்றப்படும்?” – மத்தேயு 5 : 13
குறைந்த செலவில், அதிக அளவில் பயன் தருவது உப்பு. உணவுக்கு உப்பு சுவையூட்டுகிறது, பாதுகாக்கிறது. இதற்காகத் தன்னையே கரைத்துக் கொள்ளுகிறது. நாம் உலகிற்கு உப்பாக இருக்கிறோம் என்கிறார் இயேசு. மனிதன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய இயேசு இதைக் கூறினார். மனிதனுக்கு இறைவன் தன்னையே வெளிப்படுத்தியும் இருக் கிறார். சுயநலத்துடன் வாழ மனிதனைக் கடவுள் படைக்கவில்லை. தமது அன்பை உலகுக்குக் காட்டவே மெய்யான மனிதனாகத் தம் குமாரனை, கடவுள் உலகுக்குள் அனுப்பினார். உப்பைப் போன்று தன்னை அழித்து, பிறர் வாழ்வுக்குச் சுவை தந்தார் கடவுளின் குமாரனாம் இயேசு.
பாவத்தினால் கெட்டுப் போன மனிதனைப் பாதுகாக்க, இயேசு உப்பாகி மனித வாழ்வுடன் கலந்துவிட்டார். பாவக் கிருமிகளைக் கொன்று, மனித உள்ளங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறார். இயேசுவின் வழியே பாவ மன்னிப்பைப் பெற்ற மனிதனும், உப்பைப் போன்று கரைந்து பிறருக்குச் சுவை தந்து பிறரைப் பாதுகாப்பவனாகிறான்.
ஏழ்மையினால், சாதி வேறுபாட்டினால், ஒடுக்கப்பட்டதினால், ஆதரவற்றதினால், வாழ்வில் வெறுப்படைந்திருக்கும் அன்பர்களை நினைத்துப் பார்ப்போம். நமது அன்பினால், அரவணைப்பினால், உதவியினால் நீங்களும் வாழப் பிறந்தவர்களே என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் உருவாக்கி, அவர்கள் வாழ்வைச் சுவையாக்குவோம். தீய வழிகளினின்று விலகி நடக்க, அவர்களுக்கு உதவுவோம். பிறருக்கு வாழ்வளிக்கும் முயற்சியில், நமது வாழ்வு கரையலாம், கரைய வேண்டும். இது இழப்பல்ல. இதுதான் சாரமுள்ள அர்த்தமுள்ள வாழ்வு. தன்னை அழித்து வாழும் வாழ்வு முறையை வழங்குவதில்தான் கிறிஸ்தவம் தனித்து நிற்கிறது. நீங்கள் உலகுக்கு உப்பாகுங்கள். கடவுள் உங்களை வாழவைப்பார்.
கர்த்தாவே, உம்மை இழந்து, எங்கள் வாழ்வுக்குப் பொருள் தந்த இயேசுவே, என்னை இழந்து பிறர் வாழ்வில் நான் சுவையூட்ட அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
