யாத்திராகமம் 20 : 4-8                                         1 பிப்ரவரி, 2019 வெள்ளி

“கர்த்தர் ஆறு நாளுக்குள்ளே……… எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்…” – யாத்திராகமம் 20 : 11

இது கம்ப்யூட்டர் யுகம். மின்னல் வேகத்தில் பல காரியங்களை ஆற்றுகின்ற வல்லமை கம்ப்யூட்டருக்கு இருக்கிறது. ஆனாலும் அதன் அறிவு வரையறைக்குட்பட்டதே. ஆனால் கம்ப்யூட்டருக்கும் ஓய்வு தேவையாக இருக்கின்றது. இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் இயக்கத்தை, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை சில நிமிடங்கள் நிறுத்த வேண்டி உள்ளது.

கடவுள் மனிதர்களாகிய நம் மீது அளவற்ற இரக்கமும், கருணையும் கொண்டவர். உலகின் படைப்புகள் எல்லாவற்றையும் `உண்டாகுக’ என்றார். தனது வார்த்தையின் மூலமே கர்த்தர் இவற்றைப் படைத்துவிட்டார். ஓர் உயர்ந்த நிலையை மனிதருக்குப் படைப்பின் நிலையிலேயே தர எண்ணினார் கர்த்தர். மண்ணைத் தனது கையில் எடுத்தார். அதிலிருந்து தனது சாயலாக மனிதனைப் படைத்தார். ஜீவ சுவாசத்தை மனிதனின் நாசியில் ஊதினார். மனிதன் `ஜீவாத்மா’ ஆனான். மனிதன் வாழ அவனுக்கு ஒரு உத்யோகம் – தொழில் தந்தார். வாழ்ந்திட ஒரு தோட்டம் தந்தார். ஒரு துணையையும் கொடுத்தார். தினமும் காலையில் மனிதனோடு உரையாடினார். இன்றைய மனிதரின் நிலை என்ன? காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையில் கண்ணயருகின்ற வரை பணம் தேடும் முயற்சியில் நாம் எந்திரமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நமக்கும் ஓய்வு கட்டாயத் தேவை என்பதை கர்த்தர் அறிந்து இருக்கிறார். அதற்கு ஒரு செயல்முறைத்திட்டத்தைத் தன் வாயிலாகவே நமக்குக் காட்டியும் இருக்கிறார்.

ஆறு நாட்களில் உலகிலுள்ள யாவற்றையும் படைத்து ஏழாம் நாளிலே கடவுள் ஓய்வில் இருந்தார். `மனிதனே, நீயும் என்னைப் பின்பற்றி ஓய்வாகயிரு, இளைப்பாறு’ என்று வழிகாட்டும்படி தான், கடவுள் ஓய்ந்திருந்தாரோ?
`இளைப்பாறுதல் தருவேன்’ என்றவர் இயேசு. வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பது தினப்பாடுகள் மட்டுமல்ல. இத்தகைய பிரயாசைகளில், சுமைகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றால் போதாது. பாவம் செய்தேன் எனும் குற்ற உணர்வில் இருந்தும் இளைப்பாறுதலும் ஓய்வும் வேண்டுமே. இயேசு பாவமன்னிப்பாம் ஓய்வைத் தருகிறார். ஏழாம் நாளில் அல்லது ஏதாவது ஒரு நாளில் ஓய்ந்திருப்போம். இயேசு அருளுகிற பாவமன்னிப்பாம் அழியாத ஓய்வை தினமும் அனுபவிப்போம்.

கர்த்தாவே! நீர் எங்களுக்குக் காட்டி இருக்கும் செயல் திட்டத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வை எமக்குத் தாரும். உண்மையுடன் உத்தமத்துடன் இவற்றைப் புரிந்து பின்பற்றிட அருள்தாரும். ஓய்வுநாள் உமது நாள். இந்த நாளை எனது சொந்த நாளாக்கிவிடாமலிருக்க எனக்குத் துணை செய்திடும். இயேசு வழியே ஆமேன்.