மத்தேயு 7 : 7-11 19 டிசெம்பர், 2018 புதன்
“அப்பத்தைக் கேட்கும் மகனுக்குக் கல்லைக் கொடுக்கும் மனுஷன் எவனாகிலும் உங்களில் உண்டோ?” – மத்தேயு 7 : 9
பிள்ளைகள் கேட்பதையும், கேட்காததையும் அவசியப்படும்போதெல்லாம் தருபவர் பெற்றோர். சிலபொழுது பிள்ளைகள் கேட்பதை, தராமல் இருப்பவர்களும் தாய் தந்தைதான். பிள்ளைக்குப் பொருத்தமில்லாததைத் தருவது ஆபத்தை உருவாக்கும் எனப் பெற்றோர் அறிவர். உண்ண உணவு கேட்கும் பிள்ளைக்கு, சோத்துக்கு பதில், தகப்பன் மண்ணைத் தந்தால் இது தவறல்லவா? இப்படி எந்தத் தந்தையும் செய்யமாட்டார்.
இறைவன் நமது பரம தந்தை. நாம் கடவுளின் பிள்ளைகள். இந்த உறவால் இறைவனிடம் கேட்க நாம் உரிமைப்பட்டவர்கள். நாம் கேட்காமலே இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை உலகுக்கு பரம தகப்பன் கொடுத்திருக்கிறார். பேரரசன் சாலமோன் இறைவனிடம் ஞானம் கேட்டான். யாக்கோபு ஆண்டவரிடம் ஆசீவாதம் கோரினான். கள்ளன் இயேசு சுவாமியிடம் அவர் `இராஜ்ஜியத்தில்’ இடம் கேட்டான். இவர்களெல்லாம் கேட்டதைப் பெற்றுக் கொண்டனர். கொடுக்கின்றவர் கடவுள். கொடுக்கிற கடவுளைப் பற்றி இவ்வளவு ஆழமாகப் பேசின காரணம் உங்களுக்கு விளங்குகிறதா? கடவுள் நமது தகப்பன் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.. நம்மில் அக்கறை கொண்டுள்ள தகப்பன், ஜெபிக்கச் சொன்ன தகப்பன், ஜெபிக்கச் சொல்லிக் கொடுத்த தகப்பன்! ஜெபிப்போம்.
மீனைக் கேட்டால் பாம்பையோ… பன்னுக்கு பதில் பாறாங்கல்லையோ இந்த பரம தகப்பன் கொடுக்க மாட்டார் என்று ஆதாரப்பகுதி விளக்குகிறது. இந்த பரம தகப்பனிடம் நமக்காகவும் பிறருக்காகவும் கேட்டுக்கொண்டே இருப்பதில், பிடிவாதமாக ஜெபிப்பதில் அக்கறை காட்டுவோம். கேட்போம்… கடவுளின் விருப்பம் அறிந்து கேட்போம். ஜெபிப்போம், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபிப்போம்.
அன்றன்று வேண்டிய ஆகாரத்தைத் தரும் இறைவா, உமது சித்தத்திற்கிசைய நாங்கள் கேட்பதை பல வேளைகளில் தருகிறீர். நாங்கள் கேட்பது எங்களுக்கு தீமையைத் தரும் என நீர் அறிந்தால்இவற்றை மறுக்கிறீர். உம்முடைய சித்தமே ஆகக்கடவது. இயேசுவின் வழியே ஆமேன்.
