யோவான் 10 : 22-30                                     10 டிசெம்பர், 2018 திங்கள்

“கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; ” – யோவான் 1 : 18

காற்றை நாம் கண்டதில்லை. ஆனால் காற்றை உணருகிறோம், சுவாசிக்கிறோம். கடவுளை ஒருவரும் கண்டதில்லை. ஆனால் கடவுளின் செயல்களைக் கண்ணாரக் காண்கிறோம். பூமியைச் சுழலச் செய்கிறார். பகலில் ஒளி தந்து உயிர் காக்கும் சூரியனையும், இரவில் குளிர் தரும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்திருக்கிறார். மன்னுயிர் காக்க மழையைத் தருகிறார். நாம் காணும் இத்தனை நன்மைகளும் கடவுளின் கரங்களில் கிரியைகளல்லவா? இவை எல்லாவற்றிற்கும் சிறப்பாக, இறைவன் தம்மை இயேசுவில் வெளிப்படுத்தியிருப்பதை தியானப்பகுதி விளக்குகிறது.

ஒரே பேறான குமாரனாக கிறிஸ்து இயேசுவை மனிதனாகப் பிறக்கச் செய்தார் கடவுள். இயேசுவின் வாழ்வின் வழியாக இறைவனின் அன்பு, கருணை, தியாகம், மன்னிக்கும் மாண்பு ஆகியவை உலகுக்கு உணர்த்தப்பட்டன. `இயேசுகிறிஸ்துவே உலக மீட்பர்’ என்ற சத்தியத்தை உலகத்தில் அறியாதவர்களே இல்லை எனலாம். இந்த உண்மை எல்லாருக்கும் தெரியும். தெரிந்தும் சிலர் மறுக்கின்றனர். தெரிந்தும் சிலர் எதிர்க்கின்றனர். இவர்களுக்கு `வெளிப்படுதல்’ கிடைத்துவிட்டது. இதை இவர்கள் உணர்ந்தால் போதும். சிலர் இயேசுவை அறிந்து உணர்ந்திருந்தும், கிறிஸ்தவன் எனப் பெயர் வைத்திருந்தும் கிறிஸ்தவனாகத் தன்னை வெளிப்படுத்துவதில்லை. இவர்களும் திருந்த வேண்டியவர்களே.

கடவுளை வெளிப்படுத்தும் நடமாடும் சான்றுகள் நாம்தான். இயேசுவை உலகிற்கு தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் உயிருள்ள சான்றுகள் நாம்தான். வாருங்கள், கடவுளின் சான்றுகளே புறப்படுங்கள். கடவுளை வெளிப்படுத்தும் பேறு பெறுவோம்.

இயேசுவில் உம்மை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கும் கடவுளே, உமது செயல்பாடுகளை உணரும் உள்ளத்தைத் தாரும். உம்மைப் பிறருக்கும் காண்பிக்க அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.