எஸ்தர் 8 : 1-7 12 நவம்பர், 2018 திங்கள்
“கடவுளிடம் அன்புகூருகிறவர்களுக்கு,….. சகலமும் நன்மைக்கு ஏதுவாக ஒத்து நடக்க அவர் செய்கிறாரென்று…” – ரோமர் 8 : 28
ஒரு குடும்பம் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் வாகனம் விபத்திற்குள்ளானது. மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். மகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த கணவன் அவளைப் பார்க்க வருகிறான். அந்நேரத்தில் ஆஸ்பத்திரியில் நின்ற நர்ஸ் இவனை உற்றுப்பார்த்தாள். அடையாளம் கண்டுகொண்டாள். தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றவன் என்று. காயம்பட்டு கிடந்த மகளிடம் சென்று விவரித்தாள். உனக்கு நியமிக்கப்பட்ட கணவன் ஏமாற்றுக்காரன் என்று. அப்போதுதான் தாயும், தந்தையும் இந்த விபத்து காரணத்தோடு தான் நிகழ்ந்தது என்று.
இந்நாளின் சிந்தனை வாக்கியத்தில் பவுலின் கூற்றும் இதுதான். கடவுளிடம் அன்பு கூறுகிறவர்களுக்கு வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான். உலகப் படைப்பாக இருக்கட்டும், இரட்சிப்பின் திட்டமாக இருக்கட்டும். இவையெல்லாம் கடவுளுடைய நேர்த்தியான திட்டத்தின்படி நடந்தது. அதேபோன்றே கிறிஸ்துவை நம்புகிறவன் வாழ்வில் கடவுளின் தீர்மானத்தின்படி காரியங்கள் நடைபெறுகின்றன. சில காரியங்கள் தீயவையாகத் தோன்றலாம். ஆனால் நன்மைக்காகத் தான் இருக்கமுடியும். இதைப் பல நேரங்களில் நாம் உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். இதன் விளைவு தீமைகள் சந்திக்கின்ற நேரத்தில் எதிர்மறையான கேள்விகளை கடவுளிடம் எழுப்புகின்றோம். எனக்கு மட்டும் ஏன் இந்த நிந்தை? எனக்கு மட்டும் ஏன் இந்தத் தோல்வி அல்லது வீழ்ச்சி? எங்கள் குடும்பத்தில் மட்டும் ஏன் இந்த கண்ணீர்? இதன் பின்னணியில் கடவுள் ஒரு ஆதாயம் வைத்திருக்கிறார் என்பதை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஒருமுறை அரசன் தாவீதை சீமேயி என்பவன் தூஷித்தான். இவன் மன்னன் சவுலின் வம்சத்தை சேர்ந்தவன். தாவீதை தூஷித்த விதம் யாராலும் பொறுத்துகொள்ள முடியாது(2 சாமுவேல் 16 :7). அப்போது அபிசாய் என்பவன் தாவீதைப் பார்த்து ‘சீமேயின் தலையை எடுத்துவர அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டான். அதற்கு தாவீது, என்னைத் தூஷிக்க வேண்டும் என்று கர்த்தர் சீமேயிக்கு சொன்னார். ஆகையினால் அவன் தூஷிக்கிறான் என்றார். கடவுள் அனுமதித்த காரியம் மனதைக் காயப்படுத்தியிருந்தாலும் அதன் பின்னணியத்தில் கடவுளின் திட்டம் இருக்கும் என்று ஆழமாக நம்பினார் தாவீது. நம் வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் நிகழ்கின்றனவா! கலங்க வேண்டாம். துவளவேண்டாம். அதில் ஒரு நன்மையான காரியத்தை வைத்திருக்கிறார் கடவுள். நாம் செய்யவேண்டியது கடவுளோடு உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்வதுதான்.
இரக்கம் மிகுந்தவரே! உம் சிந்தையை அறிந்தவன் யாருமில்லை. எங்கள் வாழ்வில் நீர் அனுமதிக்கும் காரியம் தீயவையாக இருக்கலாம். ஆனால் முடிவு நன்மையாக இருக்கும் என்ற விசுவாசத்தைத் தாரும். பலப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.