ஏசாயா 49 : 13-15                                            5 நவம்பர், 2018 திங்கள்

“…உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்.” – நீதிமொழிகள் 23 : 25

ஐரோப்பா கண்டத்தை அதிரச் செய்தவர் அஞ்சா நெஞ்சன் நெப்போலியன். இவர் ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் இளைஞர்கள் நல்லமுறையில் கல்விப் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவை என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு அவருக்குக் கிடைத்த விடை நல்ல தாய்மார்கள். இதைக்கேட்ட நெப்போலியனின் நெஞ்சம் குளிர்ந்தது. நெப்போலியன் சொன்னார் `தாய்’ என்கிற ஒரு வார்த்தையிலேயே ஒரு கல்வித்திட்டமே பொதிந்து கிடக்கிறதே என்று.

இந்த உலகத்தில் நாம் அடியெடுத்து வைத்தது முதல் மரணத்தைச் சந்திக்கின்ற வரையில் பல உறவுகளைச் சந்திக்கிறோம். சில உறவுகள் சிலகாலம் மட்டுமே. சில காரியத்திற்காகச் சார்ந்திருக்கும் உறவுகள். சில ஏமாற்றும் உறவுகள். எல்லாவற்றையும் கடந்து உண்மையான அன்பு, கரிசனை, அக்கறை உள்ள உறவு `தாய்’. தாயின் சிறப்பை `தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்ற பாடல்வரி படம்பிடித்து காட்டுகிறது. இளம் ஊழியனான தீமோத்தேயு நல்லவனென்று மதிப்பு பெற்றவன். பவுல் அடிகளாரால் அதிகமாக விரும்பப்பட்டவன். இப்படிப்பட்ட சிறப்பான வளர்ப்பிற்கு தீமோத்தேயுவின் தாயின் விசுவாச நடத்தையும் இருந்தது.

கடவுள் தம் மக்களை தேற்றும் விதத்தை `தாய்’க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். இப்பேற்பட்ட சிறப்புப் பெற்ற தாயை நம் வாழ்க்கையில் அற்பமாய் எண்ணக்கூடாது. உதாசீனப்படுத்தக் கூடாது. இந்நாளின் சிந்தனை வசனத்தில் ஞானி இவ்வாறு கூறுகிறார். உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய் என்று. இன்றைய மனிதன் பணம் பணம் என்று ஒடிக் கொண்டிருக்கிறான். உறவுகளை பொருட்டாக எண்ணுவதில்லை. பின் சொந்த தாயை கவனிக்க எங்கே நேரம். ஆகையினால் தாயை இறுதியில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான். மாதா மாதம் காசை சரியாக அனுப்பிகொடுத்துவிட்டு மனநிறைவு அடைகிறான். சிலுவையில் தொங்கின இயேசு அந்தக் கொடிய வேதனையிலும்கூட தாயை மறக்கவில்லை. `இதோ உன் தாய்’ என்று யோவானிடத்தில் தாயை ஒப்படைத்தார். இதைச் சிலுவையின் அடிவாரத்தில் இருந்த அத்தனைபேரும் பார்த்து வியந்திருப்பார்கள். தாய்மேல் எத்தனை அன்பு என்று எதிரிகள்கூட பாராட்டியிருந்திருப்பார்கள். நம் செயல்கள் தாயை வேதனைப்படுத்தகூடியதாக இருக்கின்றதா? அவர்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக நமது செயல்பாடுகள் அமையட்டும்.

தாயினும் மேலான அன்பு நிறைந்தவரே! தாயின் அன்பையும் மேன்மையையும் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறீர். இதை உணர்ந்து பெற்ற தாயின் மேல் நாங்கள் அன்பு பொழிந்து அவர்களை களிக்கூரசெய்து உம் அன்புக்கு சாட்சியாக திகழ அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.