எரேமியா 31 : 31-34 23 அக்டோபர், 2018 செவ்வாய்
“நான் அவர்கள் கடவுளாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” – எரேமியா 31 : 33
மனிதன் ஆள் பார்த்து தகுதி, அந்தஸ்து பார்த்து ஒப்பந்தங்களைச் செய்கின்றதைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் கடவுள் தகுதி, அந்தஸ்து, பார்க்காமல் மனிதர்களிடம் உடன்படிக்கை செய்கின்றார் என்பதை இப்பகுதியில் அறிய முடிகின்றது. கடவுளின் மேலான ஆசீர்வாதங்களை மறந்து, அவர் வழிநடத்துதலை ஏற்க மறுத்து வழி விலகி பாவத்தினால் அடிமையாக்கப்பட்டு அல்லல்படுகிறான் மனிதன். வாழ்விழந்த மக்களுக்கு கடவுள் மீண்டும் புதிய வாழ்வு அளிக்க அவர்களுடன் புதிய உடன்படிக்கை செய்கின்றார். கடவுள் அனைவரையும் நேசிக்கின்றார், ஏற்றுக் கொள்கிறார். தமது இரக்கத்தைப் பொழிந்து, புதிய வழிநடத்துதலுக்கு அழைத்துச் செல்லுகின்றார் என்ற உறுதிப்பாட்டை மக்களுக்குத் தருவதும் கடவுளின் உடன்படிக்கைதான்.
பாவக்கட்டுகளினால் வாழ்விழந்து, சமாதானமின்றி தவிக்கின்ற நமக்கும் இந்த உடன்படிக்கை சொந்தமானது. இயேசுவின் வழியாக நம்மையும் உடன்படிக்கையில் இணைத்திருக்கிறார். அவருடைய இரட்சிப்பின் பிள்ளைகள் என்ற அந்தஸ்தை உடன்படிக்கை வழியே கொடுத்திருக்கின்றார். உயர்ந்தவராக இருந்தும் கேடுகெட்ட பாவிகளாகிய நம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும் கடவுளுடைய கிருபையை எண்ணி மகிழுவோம். நாம் கடவுளைத் தெரிந்தெடுக்கவில்லை! கடவுள் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார். இது பெரிய ஆசீர்வாதம். அதே நேரத்தில் நாம் கடவுளின் மக்களாக வாழ வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது. நான் கடவுளின் பிள்ளை. கடவுள் என் தந்தை. இந்த உரிமையைக் கடவுள் கொடுத்திருக்கிறார். திரும்பத் திரும்ப இந்த உண்மைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் அருமை உங்களுக்குப் புரியும்.
பரிசுத்தமுள்ள இறைவா, உமது பரிசுத்தத்தின் மக்களாக வாழ எங்களைத் தகுதிப்படுத்தி, உமது உடன்படிக்கையின் மக்களாக வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்த அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.
