ரோமர் 13 : 3-10                                                         31 ஆகஸ்ட், 2018 வெள்ளி

“ஏற்ற காலத்தில் கடவுள் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய வல்லமையின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்.”
– 1 பேதுரு 5 : 6

உலகச் சரித்திரத்தில், தன்னையே வல்லமையுள்ளவர்களாக உயர்த்திக் காட்டிய நெப்போலியன், அலெக்ஸாண்டர் போன்றோர் அழிந்தனர். பணிவோடும் தாழ்மையோடும், ஏழ்மையில் வாழ்ந்த சிலர், உலக அளவில் உயர்த்தப்பட்டார்கள். இதற்கு எடுத்துக்காட்டு லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்றோர்.

பவுல் கூறிய ஆதார வாக்கியத்தில் `உயர்ந்த வல்லமையின் கீழ் தாழ்த்துங்கள்’ என்ற மூன்று சொற்களும் கவனிக்கத் தக்கது. இங்கு கூறப்பட்ட `தாழ்வு’ சாதியால், செல்வத்தால் ஏற்படும் தாழ்வு அல்ல. கடவுளின் ஆற்றலின் கீழ் தாழ்தல் என்பது கடவுளின் சித்தத்திற்குக் கீழ்படிதல் என்று பொருள்படும். கடவுளின் வல்லமையின் கீழ் கடவுளின் திட்டங்கள் உங்களை உயர்த்துவதற்காகவே தீட்டப்படுகின்றன. உயர்த்தும் கடவுளின் முதல் பகுதி `தாழ்ந்திருக்கக் கற்றுக் கொடுத்தல்’ என்று தியான வசனம் சுட்டிக் காட்டுகிறது. ஓட்டப் பந்தயத்தில் ஓடத்துவங்குகிறவர்கள் ஓட்டம் துவங்குமுன்பு தங்களை மடக்கி ஒடுக்கி…. ஆற்றலையெல்லாம் உள்ளடக்கி நிற்பார்கள். நேரம் வரும் நொடியில் அம்பு போல் பாய இந்த அடக்க ஒடுக்க நிலை தேவையாகின்றது. விசுவாச வாழ்வுக்கும், அடக்க ஒடுக்கம் அவசியம்.

உங்கள் செல்வம், பெயர், புகழ், செல்வாக்கு போன்றவற்றை நல்ல நோக்கத்திற்காக விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்றவை தேவன் விரும்பும் `தாழ்ந்திருக்கும் நிலைகளாகவும்’ இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்களைக் கேட்கவேண்டிய கேள்வி! அவருடைய வல்லமையின் கீழ் நான் என்னைத் தாழ்த்துகிறேனா? இதற்கு என்னில் காணப்படும் அடையாளங்கள் என்னென்ன என்பதுதான். ஏற்ற வேளையில் கடவுளின் வல்லமையின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள். ஏற்ற வேளையில் கடவுளின் வல்லமையின் கீழ் உயர்த்தப்படுவீர்கள்.

இறைவா! உமது திருக்குமாரன் இயேசுவை இவ்வுலகத்தில் தாழ்மையுள்ளவராக அனுப்பினதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்களும் உமது வல்லமையின் கீழ் ஏற்ற வேளையில் எங்களைத் தாழ்த்தி உயரச் செய்வீராக. ஆமேன்.