2 கொரிந்தியர் 11 : 26-33                                                   27 ஆகஸ்ட், 2018 திங்கள்

“கர்த்தருடைய கண்கள் நீதிமான்களை நோக்கும்… வேண்டுதலைக் கவனித்துக் கேட்கும், தீமை செய்கிறவர்களுக்கோ
கர்த்தருடைய முகம் விரோதம்.” – 1 பேதுரு 3 : 12

பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்கின்றனர். வேலைக்காரர், எஜமானைச் சார்ந்து வாழ்கின்றனர். ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது, வாழ்க்கையின் நியதி. கடவுளில் சார்ந்திருப்பவர்களின் அக்ரமங்களை மன்னித்து, `நீதிமான்கள்’ எனப்பெயரிட்டுக் கடவுள் அழைக்கிறார். இவர்கள் தங்கள் வாழ்வில் நீதியைச் செய்வதினால் அல்ல, கடவுள் கிருபையாய் அருளும் நீதியை ஏற்பதினால் நீதிமான்கள் ஆக்கப்பட்டவர்கள்.

கிறிஸ்தவ வாழ்வில் துன்பம், துக்கம், பாடு, வேதனை இருக்கிறது. இவற்றுடன் கிறிஸ்துவும் நம்முடனே இருக்கிறார் என்பது நமது பலம். கடவுளின் முகம் நம்மோடு இருப்பதால் சிலபொழுது வேதனைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க சிலபொழுது வெற்றியுடன் சமாளிக்க முடியும். கர்த்தரைச் சாராதவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது! கடவுளின் கிருபையை இவர்கள் நாடாததால், இவர்கள் செய்த தீமைகள் இவர்களுக்கு விரோதமாகச் சதி செய்யும். கடவுளுக்குத் தங்கள் முதுகைக்காட்டி நிற்பதால், இவர்களுக்கு கர்த்தரின் முகம் மறைந்திருக்கிறது.

துவக்கக் காலத்தில் பலபாடுகளை அனுபவித்த திருச்சபை மக்கள் ஆறுதல் பெற இன்றைய தியான வசனத்தைப் பேதுரு எழுதினார். கர்த்தரின் பிள்ளைகளுக்கு ஆறுதலும், தீமைசெய்வோர் சந்திக்கு வேதனையும் சுட்டிக்காட்டப்படுகிறது. எறும்பு தன்னைவிடப் பத்துமடங்கு அதிகச்சுமையைச் சுமந்து செல்லுமாம் ஏன்? எப்படி? கடவுளின் அமைப்பு அப்படி! உங்கள் பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்க முடியும். கடவுள் உங்களோடிருக்கிறார். உங்கள் அமைப்பு இதுதான்.

கடவுள் பாடுகளை அனுமதித்தால், அவைகளைத் தாங்கும் வலிமையையும் நமக்குத் தருகிறார் என்பதை உணருங்கள். துன்பத்திலும், நாம் ஆண்டவரைத் துதித்து வாழும்பொழுது, பிறர் உங்களைக் கிறிஸ்தவர் என்று அடையாளங்காணுகிறார்கள்.

பாடுகளின் வழியாக உமது முகத்தின் நினைவைத் தரும் இறைவா! என்றைக்கும் உம்மைச் சார்ந்து வாழத் துணை செய்யும்! உமது வல்லமையை உணர்ந்து தொல்லைகளிலும் துணிந்து வாழும் வரம் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்