1 இராஜாக்கள் 13 : 6-10 14 ஆகஸ்ட், 2018 செவ்வாய்
“நான் உம்மோடு வருவதுமில்லை, இந்த இடத்தில் போஜனம் பண்ணுவதுமில்லை.” – 1 இராஜாக்கள் 13 : 8
யெரோபெயாம் என்ற ராஜா கடவுளின் மனுஷனைக் கொல்லத் தன் கையை நீட்டினார். இதனால், ராஜாவின் கை மடக்க முடியாதபடி மரத்துப் போனது. ராஜா தன் செயலுக்காக வருந்தினார். கடவுளின் தயவை நாடினார். ராஜாவின் வேண்டுகோள்படி கடவுளின் மனுஷன், கடவுளிடம் ஜெபித்தார். ராஜாவின் கை குணமானது. ராஜா மகிழ்ச்சியுற்று, தன்னோடு விருந்துண்ணவும் வெகுமதி பெற்றுச் செல்லவும் கேட்டுக் கொண்டார். கடவுளின் மனுஷன் அதை மறுத்துவிட்டார்.
எதை மறுக்க வேண்டுமோ, அதை மறுத்தே ஆகவேண்டும். கடவுளின் கிருபையினால் செய்த செயலுக்குக் கைக்கூலி வாங்குவது தேவத்துரோகம். இதைக் கடவுளின் மனிதன் உணர்ந்திருந்தான். அன்பளிப்புகளையோ உதவிகளையோ பெற்றுக் கொள்ளலாமா? நீங்கள் லஞ்சம் வாங்காதவரா? கடவுள் உங்களை ஆசீர்வதிக்கிறார்! நீங்கள் லஞ்சம் கொடுக்கிறவரா? கடவுள் உங்களுக்காகக் கண்ணீர்விடுகிறார். உங்களை எச்சரிக்கிறார். லஞ்சம் வாங்கினால் என்ன தப்பு, நானாகக் கேட்கவில்லையே என்று தோன்றுகிறதல்லவா! நமக்கல்லாததை நாம் பெற்றுக் கொள்வது பாவம் தானே! இலவசமாக உன்னை மீட்டுக் கொண்ட இயேசுவின் பிள்ளையல்லவா நீ! தன்னை வழங்கிய இயேசுவைத் துதிக்கிறாயே… நீயா லஞ்சம் கொடுக்கிறாய். நீயா லஞ்சம் வாங்கி வீடு கட்டுகிறாய்?
மனிதரைத் திருப்தி செய்ய கைக்கூலி கொடுக்கிற மக்கள், கடவுளைத் திருப்திப் படுத்த காணிக்கை கொடுக்கிறார்கள், காணிக்கையும் ஒரு லஞ்சம் ஆகிவிடுகிறது. நியாயமான தேவைகளுக்குக் கடவுளிடம் கேளுங்கள். உழையுங்கள், பெற்றுக் கொள்வீர்கள். பிறர் பொருளை நாடாமலிருக்க கடவுள் துணை நிற்கிறார். லஞ்சம் பெறுவதையும், கொடுப்பதையும் மறக்க கடவுள் உங்களோடிருக்கிறார்.
எங்களுக்கானவற்றை, எங்களுக்குத் தந்த தெய்வமே! நாங்கள் லஞ்சம் வாங்காமலிருக்க எங்கள் மனதைக் கட்டுப்படுத்தும். லஞ்சம் கொடுக்கும் சோதனையிலிருந்து எம்மை விடுவியும். இயேசுவின் வழியே ஆமேன்.
