அப்போஸ்தலர் 2 : 1-6                                                       10 ஆகஸ்ட், 2018 வெள்ளி

“பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசு ஆண்டவர் என்று ஒருவனும் சொல்ல முடியாதெனவும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.”  – 1 கொரிந்தியர் 12 : 3

`நம்ம தலைவரோடு நீங்கள் மிகவும் நெருங்கிய தொடர்பும் உறவும் வைத்திருக்கிறீர்களே எப்படி’ என்று? ஒருவர் கேட்க, மற்றவர் `ஓ அதுவா அதுக்கு இந்த நண்பர்தான் காரணம்’ எனக் கூறி, பக்கத்தில் நின்றவரைச் சுட்டி காட்டினார். `இவரில்லாமல் நான் நம்ம தலைவரைச் சந்தித்திருக்கவோ, பேசவோ பழகியிருக்கவோ முடியாது’ என்றார்.

`கிறிஸ்து இயேசுதான் உலக மீட்பர்’ என, நாள்தோறும் மனிதருக்கு இயேசுவை அறிமுகப்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர் என்பதே ஆதார வசனம் காட்டும் உண்மை. ஆறுதல் சொல்லுகிறவராக, ஒற்றுமைப்படுத்துகிறவராக, சகாயம் செய்கிறவராக, போதிக்கிறவராக ஆவியானவர் நமக்குத் தரப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே `கிறிதுவே நமக்கு ஆண்டவர்’ என்று தினந்தோறும் நமக்குக் காட்டுகிறார். ஆவியானவர் ஆண்டவரை உணர்த்துகிறவர். இயேசுவை வெளிப்படுத்தாத எந்த வரமும் எந்த அற்புதமும் பரிசுத்த ஆவியின் செயற்பாடு அல்ல. ஆவியானவரின் அசைவாடல் இருக்கிறது என்கிறீர்களா? கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அங்கே இயேசு இரட்சகர் அசைவாடுவார். தனிப்பட்ட மனிதர் அல்ல. அவருடைய பிரசங்கம், ஜெபம் எழுப்புதலாகயிருக்கிறது என்கிறீர்களா? `பிரைஸ் த லார்ட்’! ஆனால் அவருடைய பிரசங்கத்தில் ஆண்டவர் மகிமைப்படுகிறாரா? இல்லையென்றால்?

இயேசு கிறிஸ்துவை நாம் மறந்துவிட வேண்டாம். இது பேராபத்து! சுயமுயற்சியால் தூயாவியானவரை வரவழைக்க, பெற்றுக்கொள்ள முயற்சிக்கவும் வேண்டாம். எங்கே இயேசு அறியப்படுகிறாரோ, அறிவிக்கப்படுகிறாரோ, அங்கே தூயாவியானவர் இருக்கிறார் என்பது வேதம் காட்டும் உண்மை.

இறைவனே! இறைமைந்தனே! பரிசுத்த ஆவியானவரே! பரிசுத்த ஆவியானவரால் உம்மையும், இயேசு கிறிஸ்துவையும் எங்களுக்கு அறிவிப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் நம்பிக்கை உம்மில் வளர அருள் செய்தருள வேண்டுமென இயேசுவின் பெயரில் கேட்கிறோம். பிதாவே ஆமேன்.